கிரைம் செய்திகள்...

முதியவர் சாவு: போலீஸ் விசாரணை விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில், நடராஜ், 75; என்பவர் கடந்த மாதம் 16ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து இறந்த நபர் யார் என விசாரித்து வருகின்றனர்.

காப்பர் காயில் திருட்டு வரஞ்சரம் அடுத்த ஈயனுார் - ஒகையூர் செல்லும் சாலையில் விளைநில பகுதியில் இருந்த டி ரான்ஸ்பார்மரின் போல்டுகள் அகற்றப்பட்டு இருப்பதாக மின்வாரியத்துறை அலுவலர்களுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. நாகலுார் இளமின் பொறியாளர் அன்பழகன், 50; சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். அதில் டிரான்ஸ்பார்மரில் உள்ள 250 கிலோ எடையும், 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் காயில்கள் திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

இளம் பெண்கள் மாயம் கள்ளக்குறிச்சி கோட்டைமேட்டைச் சேர்ந்தவர் மாயவன் மகன் ராஜலட்சுமி, 19; இவரை கடந்த 15ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பால்ராம்பட்டைச் சேர்ந்தவர் நாராயணன் மகள் நவீனா, 21; திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் எம்.எஸ்சி., முதலாமாண்டு படிக்கிறார். இவரை கடந்த 14ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து தனித்தனி புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின் றனர்.

டிராக்டர் டிப்பர் திருடியவர் கைது திருவெண்ணெய்நல்லுாரைச் சேர்ந்தவர் ஆனந்தன், 45; விவசாயி. கடந்த 10ம் தேதி இரவு இவரது டிராக்டர் டிப்பர் திருடு போனது. புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து கண்காணிப்பு கேமரா மூலம் டிராக்டர் டிப்பரை திருடியது சேத்துார் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன், 48; என தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்தில், டிராக்டர் டிப்பரை திருடி விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டார். உடன், விற்பனை செய்தவர்களிடம் டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து பாலமுருகனை கைது செய்தனர்.

முதியவர் தற்கொலை அவலுார்பேட்டை அடுத்த தேப்பிரம்பட்டு சாமிநாதன், 76; இவர், அல்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டார். நேற்று முன்தினம் மதியம் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் பூச்சி மருந்து குடித்தார். உடன், திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கணவரை தாக்கிய மனைவி மீது வழக்கு வளத்தி அடுத்த தேவனுாரைச் சேர்ந்தவர் எத்திராஜ் மகன் கார்த்திக், 31; இவரது மனைவி நிரோஷா, 21; திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. 7 மாத ஆண் குழந்தை உள்ளது. தம்பதியினர் 7 மாதமாக பிரிந்து வசிக்கின்றனர். குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 10ம் தேதி நிரோஷா, அவரது உறவினர்கள் கங்காதரன், 41; சுமதி, 65; ஆகியோர் தகராறு செய்து திட்டி, கார்த்திக்கை தாக்கினர். புகாரின் பேரில் வளத்தி போலீசார் நிரோஷா உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முன்விரோத தகராறு: வாலிபர் கைது மயிலம் அடுத்த பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் விஷ்ணு, 19; அதே கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கோகுல். இருவருக்குமிடையே முன் விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் செல்லியம்மன் கோவில் அருகே கோவிந்தன் மகன்கள் கோகுல் 23; கோபிநாத் 24; குப்பன் மகன் சந்தோஷ் 27; காளி மகன் ஆதி 21; ஆகிய நான்கு பேரும் விஷ்ணுவிடம் தகராறு செய்து தாக்கி கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் கோகுல் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து கோபிநாத் என்பவரை கைது செய்தனர்.

Advertisement