மேற்கு வங்கம், கேரளா சட்டசபை தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்தது பாஜ

புதுடில்லி: மேற்கு வங்கம், கேரளா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜ அறிவித்துள்ளது. மம்தாவை எதிர்த்து சுவேந்து அதிகாரியும், கேரளாவில் பாஜ மாநில தலைவர் ராஜிவ் சந்திரசேகர் நெமம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாக ஏப்.23 மற்றும் ஏப் 29 தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு மொத்தமுள்ள 294 தொகுதிகளில் முதற்கட்டமாக 144 தொகுதிகளுக்கு பாஜ வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, 2 தொகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவரான சுவேந்து அதிகாரியை வேட்பாளராக பாஜ அறிவித்து இருக்கிறது.

பபானிபூர் மற்றும் நந்திகிராம் ஆகிய தொகுதிகளில் அவர் போட்டியிடுகிறார். பபானிபூர் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ முதல்வர் மம்தா பானர்ஜி. அவர் இந்த தேர்தலில் அதே தொகுதியில் தான் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

காலிகன்ஜ் தொகுதியில் பபன் கோஷ், ஹன்சன் தொகுதியில் நிகில் பானர்ஜி, சிலி குரி தொகுதியில் சங்கர் கோஷ் ஆகியோர் வேட்பாளர்களாக பாஜ தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 10 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். தற்போது 144 தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், எஞ்சிய தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் விவரங்களும் விரைவில் வெளியிடப்பட இருக்கின்றன.

ஏப்.9ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் கேரளா சட்டசபை தேர்தலில், இடதுசாரிகள் கூட்டணி ஒரு புறமும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு கூட்டணியும் உள்ளன. இத்தேர்தலில் பாஜவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது. இங்கு போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜ வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் தேர்தல் குழுவினர் கடந்த 12ம் தேதி கட்சியின் தேசியத் தலைவர் நிதின் தலைமையில் கூடி ஆலோசித்து வேட்பாளர்களை தேர்வு செய்து உள்ளனர்.

47 பேர் கொண்ட இப்பட்டியலில், 7 பேர் பெண்கள் ஆவார்கள். கே. சுரேந்திரன் மஞ்சேவர் தொகுதியிலும், நவ்யா ஹரிதாஸ் கோழிக்கோடு வடக்கு தொகுதியிலும், வழக்கறிஞர் ஜார்ஜ் குரியன் - கஞ்சிரப்பள்ளி தொகுதியிலும், வி.முரளீதரன்- கழக்கூட்டம் தொகுதியிலும், மாநில தலைவர் ராஜிவ் சந்திரசேகர் - நெமம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

Advertisement