எம்எல்ஏக்கள் ஆப்சென்ட், மாற்றி ஓட்டு: பீஹார், ஒடிசாவில் ராஜ்யசபா தேர்தலில் பரபரப்பு

6


புதுடில்லி: பீஹாரில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் 4 பேர் ஓட்டெடுப்பை புறக்கணித்த நிலையில், ஓடிசாவில் எதிர்க்கட்சி எம்எல்ஏ ஒருவர் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டுள்ளார். அங்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் மாற்றி ஓட்டுப்போட்டது தெரியவந்துள்ளது.



நாடு முழுவதும் காலியாக உள்ள 37 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கான தேர்தலை கடந்த மாதம் தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதில், தமிழகம், சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 26 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சிய 11 எம்பி பதவிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. பீஹார்(5), ஒடிசா(4), சண்டிகர்(2) காலை 9 மணி முதல் 5 மணி வரை தேர்தல் நடந்தது. அதில், பாஜ தேசியத் தலைவர் நிதின் நபின், பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் ஆகியோர் முக்கியமானவர்கள்.

ஒடிசா



ஒடிசாவில் தேர்தலின் போது பாஜ மற்றும் பிஜூ ஜனதா தள கட்சி எம்எல்ஏக்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் தேர்தல் நடக்கும் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


இதனிடையே தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வரும், பிஜூ ஜனதா தள தலைவருமான நவின் பட்நாயக் கூறியுள்ளார்
அவர் மேலும் கூறுகையில், பாஜ குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது. பாஜ தனக்கு ஆதரவாக பல எம்எல்ஏக்களை வாங்கிவிட்டது. அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. பிரமஸ்ரீரி தொகுதி எம்எல்ஏ முதலில் ஓட்டுப்போடும் போது தவறு செய்துவிட்டதாக கூறி இரண்டாது ஓட்டுச் சீட்டு வழங்கப்பட்டது.
இது ஜனநாயக விதிமீறல். இதற்கு பிஜூ ஜனதா தளம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த போதும் அதனை தேர்தல் நடத்தும் அதிகாரி கண்டுகொள்ளவில்லை என்றார்.

அக்கட்சி எம்எல்ஏ சவுபிக் பிஸ்வால் கூறுகையில், ' நான் ஓட்டை மாற்றி போட்டேன். எனது தந்தையை அவமானப்படுத்திவிட்டனர். இதனால், சுயேச்சை வேட்பாளருக்கு மாற்றி போட்டேன்' என்றார்.


ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் கூறுகையில், எங்கள் கட்சி எம்எல்ஏக்களான ரமேஷ் ஜெனா, தசரி கொமாங்கோ, சோபியா பீர்தோஸ் ஆகியோர் கட்சி மாறி ஓட்டுப்போட்டனர். அவர்களுக்காக கட்சி எவ்வளவோ செய்துள்ளது. அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோருவோம் என்றார்.

பீஹார்



பீஹாரில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மனோகர் பிரசாத், மனோஜ் விஸ்வாஸ், சுரேந்திர பிரசாத் குஷ்வாஹா ஆகியோர் ராஜ்யசபா தேர்தலில் ஓட்டுப்போடவில்லை.
ஆர்ஜேடி கட்சியின் 25 எம்எல்ஏக்களில் பைசல் அலி மட்டும் ஓட்டுப்போடவில்லை.

எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஓட்டுப்போட வராததால் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என ஐக்கிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது. இண்டி கூட்டணியில் இடம்பெறாத அசாதுதீன் ஓவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் எம்எல்ஏக்கள் 5 பேர் ஆர்ஜேடி வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். ஆனால், காங்கிரசின் எம்எல்ஏக்கள் 3 பேரும், ஆர்ஜேடி கட்சியின் எம்எல்ஏ ஒருவரும் ஓட்டுப்போடாதது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement