ஆற்றில் கவிழ்ந்த ஆம்னி பஸ் இருவர் பலி; 28 பேர் காயம்

நாகர்கோவில்: தக்கலை அருகே பைக் மீது மோதி, ஆம்னி பஸ், ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்; 28 பேர் காயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து, கேரள மாநிலம், கொல்லத்துக்கு தனியார் ஆம்னி பஸ் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. நேற்று காலை, நாகர்கோவில் ஆம்னி பஸ் ஸ்டாண்டில், 14 பயணியரை இறக்கிவிட்ட பின், திருவனந்தபுரம் நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே குமாரகோவில் விலக்கு பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ், எதிரே வந்த பைக் மீது மோதி, துாவலாற்றுக்குள் கவிழ்ந்தது.

இதில், பைக்கில் வந்த சிதறால் பகுதியை சேர்ந்த விஜய், 28, பைங்குளத்தை சேர்ந்த சுரேஷ், 42, ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இருவரும் உறவினர்கள். வெல்டிங் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளது.

ஆற்றில் பாய்ந்த பஸ்சுக்குள் சிக்கிய, 28 பயணியரை, அங்கிருந்தவர்களுடன் இணைந்து தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். தக்கலை அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்தில் இறந்த விஜய் மனைவி நிறைமாத கர்ப்பிணி. சுரேஷுக்கு, 5 வயதில் மகன் உள்ளார். கலெக்டர் அழகு மீனா, எஸ்.பி., ஸ்டாலின், விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

தக்கலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement