'கரும்பு விவசாயிகளுக்கு மாத வருமானம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்'
கோவை: 'தென்னிந்தியாவில் சர்க்கரை ஆலைகள்: நடப்பு சவால்களும் எதிர்கால திட்டமிடல்களும்' என்ற தலைப்பில் கோவை, கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் நடந்தது.
கரும்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சங்கம் சார்பில் நடந்த, தென்னிந்திய அளவிலான இந்த பயிலரங்கில், சர்க்கரை ஆலை மற்றும் கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர்.
கரும்பு இனப்பெருக்க நிறுவன இயக்குநர் கோவிந்தராஜ் பேசுகையில், '''எத்தனால் 27' என்ற மத்திய அரசின் இலக்கை எட்ட கரும்பு பெரும் பங்களிப்பு செய்யும். எக்டருக்கு 150 டன் உற்பத்தி செய்தால் தான் விவசாயிகளுக்கு கட்டுபடியாகும்.
ஆலைகளைப் பொறுத்தவரை, முழு கொள்திறனை பயன்படுத்த முடியாதது பிரச்னையாக உள்ளது. தொழில்நுட்ப பயன்பாடு, எந்திரமயமாக்கல், இளைய தலைமுறையினரை கரும்பு சாகுபடிக்கு ஈர்த்தல், கூட்டுப்பண்ணை முறை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.
இ.ஐ.டி., பாரி நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ஆஷிக், ''மண் வளத்தைப் பேணாமல், கரும்பு உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியாது. பூச்சி, நோய் மேலாண்மை முக்கியம். கரும்பு விவசாயிக்கு மாதாந்திர வருவாய் கிடைக்க வழி செய்ய வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.3,500 கிடைத்தால், வெட்டுக்கூலி ரூ.1,000 போய் விடுகிறது. எந்திரமயமாக்கலே தீர்வு,'' என்றார்.
சிஸ்மா தலைவர் வரதராஜன், எஸ்.என்.ஜெ., குழும துணைத்தலைவர் அனிதா, ஆந்திர மாநில சர்க்கரை மற்றும் கரும்பு ஆணையர் வெங்கட ராவ், கரும்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சங்க பொதுச்செயலாளர் கண்ணன், துணைத் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தென் மாநில அளவில் கரும்பு சாகுபடியில் சாதித்த விவசாயிகள் கவுரவிக்கப்பட்டனர்.