டீ, காபி கூடாது; 11-3 மணி வரை வெளியே செல்ல வேண்டாமே சுகாதாரத்துறையினர் அறிவுரை

காரமடை: கோடை காலத்தில் வெப்ப தாக்கத்திலிருந்து பாதுகாக்க, பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, காரமடை வட்டார சுகாதாரத் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-

வெயிலில் செல்லும் போது தொப்பி அணிந்து அல்லது குடை பிடித்து செல்ல வேண்டும். வெளிர்ந்த நிறமுடைய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

தண்ணீர் பாட்டிலை எங்கு சென்றாலும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். தாகம் எடுக்காவிட்டாலும் கூட அடிக்கடி தண்ணீர், இளநீர், மோர் போன்றவற்றை அருந்த வேண்டும்.

நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, முலாம் பழம், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி பழம் மற்றும் வெள்ளரி போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். வீட்டின் ஜன்னல்களை திறந்து காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

தொழிலாளர்கள் நிழலான இடங்களில் வேலை செய்ய வேண்டும். கடினமான வேலைகளை செய்பவர்கள் அடிக்கடி சிறு சிறு ஓய்வு எடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து மக்கள் கூடும் இடங்களிலும் பாதுகாப்பான குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.

தலைவலி, மயக்கம் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். டீ, காபி, மது மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும்.

வெயில் நேரங்களில் திறந்த வெளியில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை கார் போன்ற வாகனங்களில் தனியாக விட்டுச் செல்லக்கூடாது.

பொதுமக்கள் மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி கோடை காலத்தில் வெயில் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

-------

Advertisement