தொடு உணர்வின் மூலக்கூறு ரகசியம்

நமது சருமத்தின் மேல் ஏற்படும் ஒரு சிறு தீண்டல், செல்களுக்குள் ஒரு நுட்பமான மூலக்கூறு நடனத்தையே துவக்கி வைக்கிறது.

அந்தத் தொடு உணர்வைக் கடத்தும் 'பீசோ2' (PIEZO2) எனும் புரதம், ஒரு துல்லியமான அழுத்தத்திற்கும், தசை நார்களின் பொதுவான நீட்சிக்கும் இடையிலான வேறுபாட்டை எப்படிக் கண்டறிகிறது என்பது நீண்டகாலப் புதிராக இருந்தது.

தற்போது, நோபல் வெற்றியாளர் ஆர்டெம் படாபூடியன் தலைமையிலான ஆய்வுக் குழு, இந்தப் புரதம் செயல்படும் விதத்தைக் கண்டறிந்து அறிவியலின் ஒரு முக்கிய மர்மத்தை விலக்கியுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள், அதிநவீன 'மின்ஃப்ளக்ஸ்' நுண்நோக்கி மூலம் பீசோ2 புரதத்தை உற்றுநோக்கினர். அந்த ஆய்வில், 'பிலமின்-பி' எனும் மூலக்கூறு வாயிலாக செல்லின் உட்புறக் கட்டமைப்புடன், 'பீசோ2' ஒரு நங்கூரம் போல பிணைந்திருப்பது தெரிந்தது.

இதனால், தோலில் தொடுதல் ஏற்படும் புள்ளியில் மிகச்சிறிய அழுத்தம் ஏற்பட்டாலும் 'பீசோ2' மட்டும் மிகத் துல்லியமாக துாண்டப்படுகிறது. ஆனால், இன்னொரு புரதமான 'பீசோ1', தோலடித் தசை, சற்று அதிக அழுத்தத்தால் நசுக்கப்படும்போதுதான் துாண்டப்பட்டு, நரம்பு மண்டலம் வழியே மூளைக்கு தகவலை அனுப்புகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு, மெல்லிய தொடு உணர்வு என்பது, நரம்பு மண்டலம் சார்ந்தது மட்டுமல்ல, அது செல்களுக்குள் இருக்கும் இயற்பியல் பிணைப்புகளையும் சார்ந்தது என்பதை நிறுவுகிறது.

இந்த நங்கூரம் போன்ற பிணைப்பில் ஏற்படும் மாற்றங்கள், மனிதர்களின் உணர்திறனுக்கு அவசியம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 'பீசோ2'வின் கண்டுபிடிப்பு, தோல் தொடு உணர்வில் ஏற்படும் மருத்துவக் கோளாறுகளைப் புரிந்துகொள்ளவும், அதற்கான மருந்துகள் தயாரிக்கவும் உதவும்.

Advertisement