உரிய நேரத்தில் உரிய கண்காட்சி: தொழில் துறையினர் வரவேற்பு

திருப்பூர்:விஷன் கம்யூனிகேசன்ஸ் சார்பில், 28 வது துணி, நுால் மற்றும் அசசரீஸ் கண்காட்சி, பழங்கரை ஐ.கே.எப். வளாகத்தில் நேற்று துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சி நளை 21ம் தேதியுடன் நிறைவடைகிறது.


இதில், ஜவுளி மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையான, நுால் வகைள், துணி வகைகள், ஓவன் பேப்ரிக்ஸ், டிரிம்ஸ் மற்றும் அலங்காரப் பொருட்கள், துணி உற்பத்தி துறை சார்ந்த சேவை வழங்கும் நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

நாட்டின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்து அரங்கு அமைத்துள்ளன. தென்னிந்திய அளவில் இக்கண்காட்சியைக் காண பார்வையாளர்கள் வரவுள்ளதாக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். நாடு முழுவதும் இது வரை 28 கண்காட்சிகளை நடத்தியுள்ள இந்நிறுவனம் திருப்பூரில் முதன் முறையாக இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. கண்காட்சியை காலை 10:00 முதல் மாலை 7:30 மணி வரை பார்வையிடலாம்.

கண்காட்சி குறித்து, தொழில் துறையினர் கூறியதாவது:

'நிட்மா' தலைவர் அகில் ரத்தினசாமி: ஏறத்தாழ 30 ஆண்டுகள் முன்னர் வரை இது போன்ற கண்காட்சி அரங்குகளை பார்வையிட திருப்பூரிலிருந்து மும்பை போன்ற பகுதிகளுக்குச் சென்று வரும் நிலை இருந்தது. தற்போது திருப்பூரை தேடி கண்காட்சி அமைப்பாளர்கள், நிறுவனங்கள் வருவது மிகப் பெரிய, வரவேற்க கூடிய மாற்றம்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொது செயலாளர் திருக்குமரன்:

பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. இதனால் ஏற்றுமதி வர்த்தக வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளது. இந்த ஆர்டர்களுக்கான மூலப் பொருட்கள் ஆகியன குறித்த கண்காட்சி இதற்கு பெரும் உதவியாக அமையும். கண்காட்சியில், நீடித்த நிலைத்தன்மை கொண்ட மூலப் பொருட்கள், செயற்றை நுாலிழைகள், மாற்று மூலப் பொருட்கள் ஆகியவற்றின் பயன்பாடுகள் கொண்ட உற்பத்தி பொருட்கள் இடம் பெற்றுள்ளன.


'சைமா' சங்க தலைவர் சண்முகசுந்தரம்:

திருப்பூரில் இக்கண்காட்சியானது ஆடை தொழில் துறையினருக்கு ஒரு அருமையான வாய்ப்பு. பல்வேறு பகுதிகளிலிருந்தும் உற்பத்தியாளர்கள் அமைத்துள்ள அரங்குகள் நிச்சயம் திருப்பூர் தொழில் துறைக்கு உதவிகரமாக அமையும். குறிப்பாக உரிய நேரத்தில் இந்த கண்காட்சி நடப்பது சிறப்பு.



Advertisement