'லிப்ட்' பாதை வழியாக விழுந்து தொழிலாளி பலி

மாம்பலம்: நான்காவது மாடியில் இருந்து, 'லிப்ட்' பாதை வழியாக கீழே விழுந்த கட்டுமான தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

பீஹார் மாநிலம் பாகல்பூரைச் சேர்ந்தவர் அபிஷேக்குமார், 23. இவர், தி.நகர் சிவசைலம் தெருவில் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில், தங்கி வேலை செய்து வந்தார்.

இவர், நேற்று முன்தினம் இரவு தன்னுடன் வேலை செய்யும் உறவினரான சோட்டு குமார் என்பவருடன், 4வது மாடியில் மொட்டை மாடியில் படுத்து துாங்கினார். நள்ளிரவு திடீரென மழை பெய்ததால், இருவரும் துாக்க கலக்கத்தில் எழுந்து, கீழே இறங்க, மொட்டை மாடியில் நடந்து சென்றனர். அப்போது 'லிப்ட்' வசதி ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பாதை வழியாக கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாம்பலம் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement