தேர்தல் விதிமீறல் புகார் மீது 100 நிமிடத்துக்குள் நடவடிக்கை: பறக்கும் படை - நிலை கண்காணிப்பு குழுவினருக்கு அட்வைஸ்

திருப்பூர்: சி-விஜில் செயலியில் பதிவு செய்யப்படும் புகார்கள் மீது, விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 15 ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தலில் வாக்காளருக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காகவும், தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஆய்வு செய்வதற்காகவும் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. தொகுதிக்கு தலா ஒன்பது வீதம் 72 பறக்கும்படை; 72 நிலை கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர், எட்டு மணி நேரத்துக்கு ஒரு ஷிப்ட் என்கிற அடிப்படையில், தினம் மூன்று ஷிப்ட் வீதம், 24 மணி நேரமும் ரோந்து சென்று, ஆய்வு நடத்திவருகின்றன. உரிய ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச்செல்லப்படும் பணம், பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் மிக சுலபமாக பதிவு செய்ய ஏதுவாக, தேர்தல் கமிஷன் சி- விஜில் என்கிற மொபைல் செயலியை செயல்படுத்திவருகிறது.



யார் வேண்டுமானாலும்

---------------------

இந்த மொபைல் செயலியின் பயன்பாடு குறித்த பயிற்சி கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. பறக்கும்படை, நில கண்காணிப்புக்குழுவில் இடம்பெற்றுள்ள அலுவலர்கள் பங்கேற்றனர். மாவட்ட மின்னாளுமை முகமை மேலாளர் முத்துக்குமார், என்.ஐ.சி., மாவட்ட தகவல் தொடர்பு அலுவலர் தினகரன் ஆகியோர், பயிற்சி அளித்தனர். பொதுமக்கள் யார் வேண்டுமானாலும், தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை, சி-விஜில் செயலி வாயிலாக, மிக சுலபமாக பதிவு செய்யலாம். மொபைலில் C-Vigil என்கிற செயலியை நிறுவ வேண்டும்.

எந்த இடத்திலிருந்து செயல்படுத்தப்படுகிறதோ, அந்த இடம் செயலியில் குறிப்பிடப்படும்; பணம், பரிசு பொருள் பட்டுவாடா, விளம்பரங்கள் என, எத்தகைய விதிமீறல் நடக்கிறதோ அதனை, செயலி வாயிலாக புகைப்படம் அல்லது வீடியோவாக பதிவு செய்து, பதிவேற்றலாம்.

இந்த செயலியில் பதிவு செய்யப்படும் புகார்கள், மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு வந்துசேரும். அங்கிருந்து சம்பந்தப்பட்ட தொகுதியில் உள்ள பறக்கும்படை அல்லது நிலை கண்காணிப்புக்குழுவினருக்கு புகார் விவரங்கள் அனுப்பிவைக்கப்படும். அதனடிப்படையில் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து சென்று, உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். புகார் பதிவு செய்யப்பட்டு 100 நிமிடத்துக்குள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

பொதுமக்கள், தங்கள் மொபைல் எண் விவரங்கள் தெரியும்வகையிலோ அல்லது தெரியாமல் மறைத்து என இரண்டு வழிகளில், இந்த செயலியில் புகார்களை பதிவு செய்யலாம்.

இவ்வாறு, பயிற்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement