சலுான் கடைக்காரர் மீது சரமாரி வெட்டு கள்ளக்காதல் விவகாரத்தில் கும்பல் வெறி

சென்னை: கள்ளக்காதல் விவகாரத்தில், சலுான் கடைக்காரர் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.

கோடம்பாக்கம், புலியூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த பாலாஜி, 47. இவர், வடபழனி கங்கையம்மன் காலனி 2வது தெருவில் சலுான் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பாரதி; இரு மகன்கள் உள்ளனர். அவர்கள் பஜனை கோவில் தெருவில் வசித்து வருகின்றனர்.

பாலாஜிக்கு, லாவண்யா என்ற பெண்ணுடன் பழக்கும் ஏற்பட்டு, நான்கு ஆண்டுகளாக கணவன்- - மனைவி போல வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மது அருந்தி, கடை முன் துாங்கிக் கொண்டிருந்த பாலாஜியை, ஆட்டோவில் வந்த 5 பேர் கும்பல், கத்தியால் சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றனர்.

இந்த தாக்குதலில் பாலாஜியின் கை, மார்பு, முதுகு மற்றும் கழுத்து பகுதிகளில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.

வடபழனி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், லாவண்யா தன் கணவரை பிரிந்து சலுான் கடைக்காரர் பாலாஜி உடன் வாழ்ந்து வந்துள்ளார். தன்னுடன் சேர்ந்து வாழுமாறு லாவண்யாவின் கணவர் பலமுறை கேட்டும், அவர் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், பாலாஜி உயிருடன் இருக்கும் வரை மனைவி திரும்ப வரமாட்டார் என நினைத்து, அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Advertisement