மெஸ்ஸி '900' கோல்... * கால்பந்து அரங்கில் சாதனை

போர்ட் லாடர்டேல்: கால்பந்து அரங்கில் அதிவேகமாக 900 கோல் அடித்த வீரர் என சாதனை படைத்தார் மெஸ்ஸி.
வடக்கு, மத்திய அமெரிக்கா, கரீபிய கிளப் அணிகள் பங்கேற்கும் 'கன்காகப்' சாம்பியன்ஸ் கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் 27 அணிகள் பங்கேற்கின்றன.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள போர்ட் லாடர்டேல் மைதானத்தில் நடந்த 'ரவுண்டு-16' இரண்டாவது 'பிளே ஆப்' போட்டியில், இன்டர் மயாமி, நாஷ்வில்லே அணிகள் மோதின. இன்டர் மயாமி அணியின் கேப்டனாக, அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி களமிறங்கினார்.
போட்டியின் 7வது நிமிடத்தில் மயாமி வீரர் ரெகுய்லன் கொடுத்த பந்தை பெற்ற மெஸ்ஸி, கோலாக மாற்றினார். 74வது நிமிடத்தில் எஸ்பினோசா (நாஷ்வில்லே) ஒரு கோல் அடிக்க போட்டி 1-1 என 'டிரா' ஆனது.
இரு அணிகள் ஏற்கனவே மோதிய 'ரவுண்டு-16' முதல் போட்டி 0-0 என 'டிரா' ஆனது. இரு போட்டி முடிவில் ஸ்கோர் 1-1 என சமன் அடைந்தது. அன்னிய மண்ணில் கோல் அடித்ததன் அடிப்படையில் நாஷ்வில்லே அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, காலிறுதிக்கு முன்னேறியது. இன்டர் மயாமி அணி வெளியேறியது.
முதல் வீரர்
இப்போட்டியில் ஒரு கோல் அடித்த மெஸ்ஸி, 38, சர்வதேச கால்பந்து அரங்கில் அதிவேகமாக 900 கோல் அடித்த வீரர் என சாதனை படைத்தார். இவர் 1142 போட்டியில் இம் மைல்கல்லை எட்டினார். இந்த இலக்கை அடைந்த இரண்டாவது வீரர் ஆனார். முதலிடத்தில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 41, உள்ளார். இவர், 1236 போட்டியில் இந்த இலக்கை எட்டினார். ஒட்டுமொத்த அரங்கில் அதிக கோல் அடித்தவர்களில் ரொனால்டோ (965) முதலிடத்தில் தொடர்கிறார்.

யார் முதலிடம்
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் மறைந்த பீலே. பல்வேறு தொடர்களில் 650 உட்பட, அனைத்து வகையான போட்டிகளில் இவர், 1279 கோல் (1363 போட்டி) அடித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் புள்ளிவிபர பிரிவு கணிப்பின் படி, 679 போட்டிகளில், 762 கோல் அடித்துள்ள பீலே, மூன்றாவது இடத்தில் உள்ளார்.

சாதித்தது எப்படி
மெஸ்ஸி தனது 17 வயதில் (2004, அக்., 16) ஸ்பெயினின் பார்சிலோனா கிளப் அணிக்காக களமிறங்கினார். இவரது 900 கோல் விபரம்.
அணி போட்டி கோல்
அர்ஜென்டினா 196 115
பார்சிலோனா 778 672
பாரிஸ் ஜெயன்ட் 80 32
மயாமி 88 81

60 'ஹாட்ரிக்'
மெஸ்ஸி, தனது இடது காலால், அதிகபட்சம் 755 கோல் அடித்துள்ளார். வலது காலால் 111 உட்பட 900 கோல் அடித்துள்ளார்.
* கால்பந்து அரங்கில் 60 முறை 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். 'பெனால்டியில்' 112, 'பிரீ கிக்கில்' 70 கோல் அடித்துள்ளார்.

ரொனால்டோ 'டாப்'
கால்பந்து அரங்கில் அதிக கோல் அடித்த 'டாப்-5' வீரர்கள்.
வீரர்/அணி கோல்
ரொனால்டோ/போர்ச்சுகல் 965
மெஸ்ஸி/அர்ஜென்டினா 900
பீலே/பிரேசில் 762
ரொமாரியோ/பிரேசில் 756
புஸ்காஸ்/ஹங்கேரி 725

47 கோப்பை
கால்பந்து அரங்கில் அதிக கோப்பை வென்ற வீரர்களில் மெஸ்சி (47 கோப்பை) முதலிடத்தில் உள்ளார். ஒரு உலக கோப்பை (2022, அர்ஜென்டினா), இரண்டு 'கோபா அமெரிக்கா' கோப்பை (2021, 2024, அர்ஜென்டினா), மூன்று 'கிளப்' உலக கோப்பை (2009, 2011, 2015, பார்சிலோனா), நான்கு சாம்பியன்ஸ் லீக் (2005-06, 2008-09, 2010-11, 2014-15, பார்சிலோனா) கோப்பை அடங்கும்.
47 கோப்பை
கால்பந்து அரங்கில் அதிக கோப்பை வென்ற வீரர்களில் மெஸ்சி (47 கோப்பை) முதலிடத்தில் உள்ளார். ஒரு உலக கோப்பை (2022, அர்ஜென்டினா), இரண்டு 'கோபா அமெரிக்கா' கோப்பை (2021, 2024, அர்ஜென்டினா), மூன்று 'கிளப்' உலக கோப்பை (2009, 2011, 2015, பார்சிலோனா), நான்கு சாம்பியன்ஸ் லீக் (2005-06, 2008-09, 2010-11, 2014-15, பார்சிலோனா) கோப்பை அடங்கும்.

Advertisement