ஈரானில் போராட்டக்காரர்கள் 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்; மனித உரிமை அமைப்பு கண்டனம்

5

டெஹ்ரான்: ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்ட 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


ஈரானில் கடந்த ஜனவரி மாதம் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. பல இடங்களில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கடுமையான தாக்குதலை நடத்தினர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.


கைதானவர்களில் 19 வயதே ஆன மல்யுத்த வீரர் சலே முகமதி, சயீத் தவுதி மற்றும் மெஹ்தி காசெமி ஆகியோர் மீது கோம் நகரில் நடந்த போராட்டத்தின் போது, இரு போலீசாரைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில், 3 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இந்த செயலுக்கு ஈரான் மனித உரிமைகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இனி வரும் காலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான மற்றவர்களுக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றப்படலாம் என்று மனித உரிமைகள் அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.


இது குறித்து அதன் இயக்குநர் மஹ்மூத் அமிரி மொகாதம் கூறுகையில், "அரசியல் எதிர்ப்பை ஒடுக்குவதற்காகவும், பயத்தை உருவாக்குவதற்காகவும் செய்யப்பட்ட இந்தத் தூக்குத்தண்டனைகளை, நாங்கள் கொலைகளாகவே கருதுகிறோம். இஸ்லாமியக் குடியரசு தனது பிழைப்புக்காகப் போராடி வருகிறது.


அடிப்படை மாற்றத்தைக் கோரும் ஈரானிய மக்கள் தான் தங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். சர்வதேச சமூகம் உடனடியாகச் செயல்பட்டு மேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

Advertisement