படம் 3சி தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் குறைகளை சுட்டிக்காட்டிய  கட்சியினர்

திருப்பூர்: சட்டசபை தேர்தல் செம்மையான முறையில் நடைபெற மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அரசியல் கட்சியினர் கருத்துக்களை, தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் தெரிவித்தனர்.



திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளில், அதிகாரிகள் முனைப்புகாட்டிவருகின்றனர். தேர்தல் பணிகள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். தேர்தல் பொது, செலவின மற்றும் காவலர் பார்வையாளர்கள் முன்னிலை வகித்தனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று, தேர்தல் பணிகள் தொடர்பான தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.





கட்சியினர் பேசியதாவது:



கட்சியினர்: தேர்தல் நாள் நெருங்கும் நிலையில், புதிய வாக்காளர்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டையை விரைவாக அனுப்பி வைக்க வேண்டும். தபாலில் அனுப்பப்படும் அடையாள அட்டைகள், சரிவர வாக்காளரை சென்றடைவதில்லை. 'வீடு பூட்டப்பட்டுள்ளது' போன்ற காரணங்களை குறிப்பிட்டு, தபாலை திருப்பி அனுப்பிவிடுகின்றனர். எனவே, அந்தந்த பி.எல்.ஓ. க்கள் வாயிலாக வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சரிபார்க்க ஏதுவாக, தொகுதிவாரியாக 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர் விவரங்களை விரைந்து வழங்க வேண்டும்,' என்றனர்.





மாவட்ட தேர்தல் அலுவலர்: தேர்தல் முடியும்வரை, எவ்வித விடுமுறையும் இன்றி, திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு, தினமும் 24 மணி நேரமும் இயங்கும். தேர்தல் புகார்கள் மீது, 100 நிமிடத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் மீதான புகாரை, மாவட்ட தேர்தல் அலுவலரான எனது கவனத்துக்கு கொண்டு வாருங்கள்.



கட்சியினர்: தேர்தல் பறக்கும்படையினர், சாமானிய மக்கள் கொண்டுசெல்லும் பணத்தை பறிமுதல் செய்கின்றனர். விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், பறிமுதல் செய்த பணத்தை உடனடியாக உரிய நபர்களிடம் திருப்பி அளிக்கவேண்டும். பறக்கும்படையினர் பணம் பறிமுதல் செய்ததாக மட்டுமே செய்திகள் வெளியாகின்றன; திருப்பி அளித்ததாக செய்திகள் எதுவும் வருவதில்லை.



மாவட்ட தேர்தல் அலுவலர்: உரிய ஆவணங்களை சமர்ப்பித்தால், பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்கள் உடனடியாக திருப்பி அளிக்கப்படுகிறது. அவ்விவரங்கள் பத்திரிகை செய்தியாக வழங்கப்படும்.

@block_B@ 85 சதவீத ஓட்டுப்பதிவு தேர்தல் அலுவலர் நம்பிக்கை முந்தைய சட்டசபை தேர்தலில், தமிழகத்தில், ஓட்டுப்பதிவு 71 சதவீதமாக இருந்தது. ஆனால், திருப்பூர் மாவட்டத்தின் எட்டு தொகுதிகளுக்கான மொத்த ஓட்டுப்பதிவு, 69 சதவீத அளவிலேயே இருந்தது. நடப்பு தேர்தலில், ஓட்டுப்பதிவு 85 சதவீதத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. ஐந்து நாள் முன்பு, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடமிருந்து, வீட்டிலேயே ஓட்டுப்பதிவு செய்வதற்கான படிவம் 12டி, பூர்த்தி செய்து பெறப்படும். வாக்காளர்களுக்கு அடையாள அட்டை விரைந்து கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்காக முன்மொழிபவர், வழிமொழிபவர்கள், குறிப்பிட்ட சட்டசபை தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என இப்போதே சரிபார்த்துக்கொள்ளவேண்டும்; ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், பெயர் சேர்க்க படிவம் - 6, திருத்தத்துக்கு படிவம் - 8 உடனடியாக பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும். - மனிஷ் நாரணவரே மாவட்ட தேர்தல் அலுவலர்block_B

Advertisement