செய்யூர் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் ஏற்படுத்த நோயாளிகள் வலியுறுத்தல்

செய்யூர், செய்யூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி டயாலிசிஸ் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

செய்யூர் பஜார் வீதியில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. புத்துார், தண்ணீர்பந்தல் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான அரசு மருத்துவமனையாக உள்ளது. புறநோயாளிகள், மகப்பேறு மற்றும் அவசர சிகிச்சை என தினசரி நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல் கின்றனர்.

செய்யூர் சுற்றுவட்டாரப்பகுதிகளான சூணாம்பேடு, கடப்பாக்கம், கூவத்துார், சித்தாமூர், பவுஞ்சூர் போன்ற பகுதிகளில் சிறுநீரகப்பிரச்னை உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் செய்யூர் பகுதியில் டயாலிசிஸ் சென்டர் இல்லாததால், சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் டயாலிசிஸ் சிகிச்சைக்காக 30 முதல் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுச்சேரி, செங்கல்பட்டு, மேல்மருவத்துார் போன்ற பகுதிகளில் செயல்படும் தனியார் டயாலிசிஸ் சென்டர்களுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு நேர விரயம் மற்றும் பண விரயமாகிறது.

ஆகையால் மருத்துவத்துறை அதிகாரிகள் செய்யூர் மருத்துவமனையை தரம் உயர்த்தி, டயாலிசிஸ் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement