தனியார் இன்ஜி. கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம்; அண்ணா பல்கலை அதிகாரி மீதான வழக்கு ரத்து
சென்னை: சென்னை அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் தனியார் பொறியியல் கல்லுாரிகளுக்கு, முறைகேடாக அங்கீகாரம் வழங்கியது தொடர்பாக, அண்ணா பல்கலை இணைப்பு பிரிவு இயக்குநர் கிரிதேவ் மீதான வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலையின் கீழ், 350க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் விதிமுறைகளை பின்பற்றாமல், லஞ்சம் பெற்றுக் கொண்டு, தனியார் பொறியியல் கல்லுாரிகளுக்கு, முறைகேடாக அங்கீகாரம் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2023-24ம் கல்வியாண்டில், அண்ணா பல்கலை இணைப்பு பெற விண்ணப்பித்த, பொறியியல் கல்லுாரிகளை ஆய்வு செய்த போது, 353 ஆசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், முழு நேர ஆசிரியர்களாக பணிபுரிவது தெரிய வந்தது.
இது குறித்து விசாரிக்க, அண்ணா பல்கலை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இக்குழு கல்லுாரிகளில் ஆய்வு செய்த போது, எஸ்.மாரிச்சாமி என்ற பேராசிரியர், 11 கல்லுாரிகளில் பணிபுரிவது கண்டறியப்பட்டது.
விதி மீறல் என தெரிந்தும், தனியார் பொறியியல் கல்லுாரிகளுக்கு பல்கலை இணைப்பு வழங்கியதாக, இணைப்பு பிரிவு இயக்குநர் கிரிதேவ் உட்பட 10 அதிகாரிகள், தனியார் கல்லுாரிகள், பேராசிரியர்கள் உட்பட 7 பேர் என லஞ்ச ஒழிப்புத்துறை 17 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கிரிதேவ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி ஆஜராகி, ''மனுதாரர், பல்கலை இணைப்பு வழங்கி, 10 மாதங்களுக்கு பின், இயக்குநராக பொறுப்பேற்றார்.
இந்த முறைகேடுகளுக்கும், அவருக்கும் தொடர்பு இல்லை. ஆவணங்களை சரி பார்க்காமல், மனுதாரர் வழக்கில் ஆறாவது நபராக சேர்க்கப்பட்டு உள்ளார்,'' என்றார். அரசு தரப்பில், 'விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்தான் முழு விபரங்களும் தெரியவரும்' என, தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 'மனுதாரர் பொறுப்பேற்று, 2 மாதங்களுக்கு பின், ஊடகங்கள் வாயிலாக, இந்த முறைகேடை அறிந்து உள்ளார். பின், 2024-2025ம் கல்வியாண்டில், அத்தகைய முறைகேடுகள் நடக்காமல் இருக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.
''அதாவது மனுதாரர் பொறுப்பேற்ற பின், ஆதார் அடிப்படையில், வருகைப்பதிவு அமல்படுத்தப்பட்டு, முறைகேடு தடுக்கப்பட்டு உள்ளது. எனவே, அவருக்கு எதிராக வழக்கு தொடர முகாந்திரம் இல்லாததால், அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டார்.
மேலும்
-
ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்ற மவுண்ட்பார்க் பள்ளி முன்னாள் மாணவருக்கு பாராட்டு
-
சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் மீது போக்சோ
-
மீன் பிடிக்க வழியின்றி மீனவர்கள் வாழ்வாதாரம்.. கேள்விக்குறி ! மணல் திட்டுகளால் பாழாகும் பழவேற்காடு ஏரி
-
தேர்தல் கெடுபிடியால் பட்டு சேலை விற்பனை...படுமந்தம்! கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரம் பாதிப்பு
-
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,000 ஏரி, குளங்கள்..அழிவின் விளிம்பில்! தரிசு நிலங்களாக மாறி வருவதால் விவசாயிகள் வேதனை
-
ஓ.எம்.ஆரில் ரூ.1,500 கோடியில் குடிநீர் பணி முடிந்தும்..பயனில்லை! கம்பி நீட்டிய' நிறுவனங்களால் குடியிருப்புகளுக்கு சிக்கல்