9 தொகுதிகளின் பா.ஜ., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மாஜி அமைச்சர் கழற்றி விடப்பட்டார்

புதுச்சேரி: புதுச்சேரியில் தே.ஜ., கூட்டணியில் பா.ஜ.,விற்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை கட்சி தலைமை நேற்று வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலை, என்.ஆர்.காங்., தலைமையில் பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட தே.ஜ., கூட்டணி சந்திக்க முடிவானது. இந்நிலையில் பா.ஜ., கூட்டணியில் ல.ஜ.க.,வை சேர்க்க முயன்றது. அதற்கு எதிர்ப்பு என்.ஆர்.காங்., தலைவரான முதல்வர் ரங்கசாமி எதிர்ப்பு தெரிவிக்கவே கூட்டணி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

பிரதமர் தலையீடு: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட்டதை தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி சில நிபந்தனைகளுடன் கூட்டணியில் புதிய கட்சியை சேர்க்க ஒப்புக் கொண்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை தே.ஜ., கூட்டணி உறுதியானது.

தொகுதி பங்கீடு தொடர்ந்து நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 16 என்.ஆர்.காங்., கட்சியும், பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் 14 தொகுதிகளை பங்கீட்டு கொள்ள முடிவு செய்யப்பட்டது. அந்த 14 தொகுதிகளில் பா.ஜ., 10 தொகுதிகளிலும், அ.தி.மு.க., மற்றும் ல.ஜ.க., ஆகிய இரு கட்சிகளும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தொகுதி எண்ணிக்கை பங்கீடு முடிந்த நிலையில், எந்தந்த தொகுதி, யார் யாருக்கு ஒதுக்குவது என்பதில் கடும் குழப்பம் நிலவியது. நீண்ட இழுபறிக்கு பின், நேற்று மாலை 3 மணிக்கு கட்சி வாரியாக தொகுதி ஒதுக்கீடு முடிவானது.

என்.ஆர்.காங்., தொகுதி அதில், அதன்படி, என்.ஆர்.காங்., கட்சிக்கு திருபுவனை (தனி), நெட்டப்பாக்கம் (தனி) வில்லியனுார், மங்கலம், ஏம்பலம் (தனி), பாகூர், அரியாங்குப்பம், கதிர்காமம், இந்திரா நகர், தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, நெடுங்காடு (தனி) காரைக்கால் வடக்கு ஆகிய 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில், 9 தொகுதிகளுக்கு நேற்று முன்தினமே மனு தாக்கல் செய்துவிட்டனர். மீதமுள்ள 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளது.

பா.ஜ., விற்கான தொகுதி பா.ஜ.,விற்கு மண்ணாடிப்பட்டு, ஊசுடு(தனி), காலாப்பட்டு, ராஜ்பவன், முதலியார்பேட்டை, மணவெளி, திருநள்ளாறு, நிரவி, காரைக்கால் (வடக்கு) மற்றும் மாகி ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 5 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்துவிட்டனர். மீதமுள்ள 5 தொகுதிகளுக்கு 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காரைக்கால் வடக்கு தொகுதிக்கு இதுவரை வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை.

'மாஜிக்கு கல்தா' பா.ஜ.,விற்கு ஒதுக்கப்பட்ட ஊசுடு (தனி) தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ள மாஜி அமைச்சர் சாய்சரவணன் குமாருக்கு சீட் வழங்கப்படவில்லை. மாறாக, அதே தொகுதியை சேர்ந்த சமீபத்தில் நியமன எம்.எல்.ஏ.,வாகன நியமிக்கப்பட்ட தீப்பாய்ந்தான் ஊசுடு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க., - ல.ஜ.க., தொகுதிகள்: அ.தி.மு.க.,விற்கு உப்பளம் மற்றும் உருளையன்பேட்டை தொகுதிகளும், ல.ஜ.க.,விற்கு காமராஜ் நகர் மற்றும் நெல்லித்தோப்பு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்த தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement