நீர்ப்பாசன திட்டம் கொண்டு வந்தால் ஓட்டு! விவசாயிகள் திட்டவட்டம்: அரசியில் கட்சியினர் கலக்கம்

திருப்பூர்;வறட்சியில் வாடும் தங்கள் பகுதிக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்த உறுதி அளிப்பவருக்கு தேர்தலில் ஆதரவு அளிப்பதாக, மருதுார் ஊராட்சி மக்கள் அறிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) தொகுதி, குண்டடம் ஒன்றியம், மருதுார் ஊராட்சி. இதில் செங்காளிபாளையம், நொச்சிபாளையம், மேட்டுக்கடை ஆகிய கிராமங்கள் உள்ளன. ஏறத்தாழ, 6 ஆயிரம் மக்கள் தொகை கொண்டது இந்த ஊராட்சி. இந்த கிராமங்களில், நடுத்தர மற்றும் சிறிய விவசாயிகள், கால்நடை மற்றும் கறிக்கோழி வளர்ப்போர் மற்றும் கூலி தொழிலாளர்கள் வசிக்கின்றனர்.

கிராம பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்படுகிறது. இது தவிர, ஊராட்சி ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இருப்பினும் விவசாய நிலங்களுக்கு பாசனத் திட்டம் எதுவும் இணைக்கப்படவில்லை. விவசாய கிணறுகளிலும் மழை காலங்களில் மட்டுமே நீர் ஆதாரம் கிடைக்கிறது. இதனால் விவசாயம் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. சில பகுதிகளில் உள்ள தென்னை மரங்களும் வறட்சியால் கருகி வரும் நிலை உள்ளது.



அதேநேரம், மருதுார் கிராமத்துக்கு அருகிலுள்ள பிற கிராமங்களுக்கு பி.ஏ.பி. மற்றும் அமராவதி பாசன திட்டங்கள் வாயிலாக பாசனம் வழங்கப்படுகிறது. இதற்கு சில கி.மீ., தொலைவில் தான் உப்பாறுஅணை உள்ளது. இருப்பினும் இப்பகுதி மேடான பகுதியாக உள்ளதால் எந்த பாசனத்திட்டத்திலும் இதை இணைக்காமல் விட்டு விட்டனர்.

வேறு வழியில்லை

-----------------



மருதுார் கிராம மக்கள் கூறியதாவது:

கிராமத்துக்கு பாசன வசதி கேட்டு, 2016 சட்டசபை தேர்தலையும் நாங்கள் முழுமையாகப் புறக்கணித்தோம். இருப்பினும் எந்தப் பயனும் இல்லை. எங்கள் ஆதரவு யாருக்கும் தேவையில்லை என அனைத்து அரசியல் கட்சிகளும், எங்கள் ஓட்டுரிமையை பாதுகாக்க தேர்தல் கமிஷனும் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த முறை, எங்களுக்கு வறட்சியைப் போக்க நீர்ப்பாசன திட்டம் கொண்டுவர உறுதி அளிக்கும் வேட்பாளருக்குத் தான் ஆதரவளிப்பது என முடிவு செய்துள்ளோம். இதை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை. இந்த அறிவிப்புக்காவது ஏதேனும் பயனிருக்கிறதா என்று பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement