இதே நாளில் அன்று

மார்ச் 22:

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு கிராமத்தை பூர்வீகமாக கொண்ட ராமசாமி என்பவரின் மகனாக, 1945, ஜூலை 1ல் பிறந்தவர் மீனாட்சிசுந்தரம் ராமசாமி விசுவநாதன் எனும் விசு.
இவர், சென்னையில் படித்து, டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தபடியே, நாடகங்களுக்கு கதை எழுதினார். பின், ஒய்.ஜி.பார்த்தசாரதியின் நாடக குழுவிலும், இயக்குநர் பாலசந்தரிடமும் உதவியாளராக பணியாற்றினார்.

பாலசந்தரின், பட்டினப்பிரவேசம் படத்தின் திரைக்கதை ஆசிரியராகி, தில்லுமுல்லு, நெற்றிக்கண் படங்களால் புகழ் பெற்றார். குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் நடிகராகவும், மணல் கயிறு படத்தில் இயக்குநராகவும் உருவெடுத்தார்.

கூட்டுக்குடும்ப உறவுகளின் உணர்வுகளையும், நியாயங்களையும் தன் படங்களில் எடுத்துக் காட்டினார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தொடர்ந்து இயக்கினார்.

சம்சாரம் அது மின்சாரம், நீங்க நல்லா இருக்கணும் திரைப்படங்களுக்காக தேசிய விருதுகளை பெற்றார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனும் பன்முகம் கொண்ட இவர், தன் 75வது வயதில், 2020ல் இதே நாளில் மறைந்தார்.

இவரது நினைவு தினம் இன்று!

Advertisement