உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? அரசு பஸ்சை சிறைப்பிடித்து மக்கள் கேள்வி
பல்லடம்:பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் பகுதியில் இருந்து, தொழில், வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, ஏராளமான பொதுமக்கள், தொழிலாளர்கள் திருப்பூர், பல்லடம் பகுதிக்கு சென்று வருகின்றனர்.
இவ்வாறு, செல்லும் பொதுமக்கள் பெரும்பாலும் அரசு பஸ்களையே பயன்படுத்தி வரும் நிலையில், சில அரசு பஸ்கள் இங்குள்ள பஸ் ஸ்டாப்பில் நின்று செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. நீண்ட காலமாக, இப்பகுதி பொதுமக்கள், இதற்காக போராடி வரும் நிலையில், கள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாப்பில், அனைத்து அரசு பஸ்களும் நின்று செல்ல வேண்டும் என்ற உத்தரவை, போக்குவரத்து கழகத்திலிருந்து பொதுமக்கள் போராடிப் பெற்றனர்.
இருப்பினும், சில அரசு பஸ்கள் கள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் நிற்பதில்லை. நேற்று, மதுரை செல்லும் அரசு பஸ் ஒன்று, கள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் சென்றதைத் தொடர்ந்து, இப்பகுதி பொதுமக்கள், பஸ்சை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'எவ்வளவு சிரமப்பட்டு, கள்ளிப்பாளையத்தில் பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என்ற உத்தரவை போராடிப் பெற்றுள்ளோம். ஆனால், அதையெல்லாம் மதிக்காமல், திண்டுக்கல், தாராபுரம் பஸ்களில் செல்லுங்கள் என, அரசு பஸ் நடத்துனர்கள் அலட்சியமாக கூறுகின்றனர். இவர்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? இவர்களது குடும்பத்தை சேர்ந்த பெண்கள் யாராவது வேகாத வெயிலில் இவ்வாறு நின்றிருந்தால் இப்படித்தான் செய்வார்களா? மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்,' என்றனர்.
பஸ் சிறைபிடிக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்து வந்த போக்குவரத்து கழக ஆய்வாளர்கள் மற்றும் காமநாயக்கன்பாளையம் போலீசார், இது குறித்து விசாரித்தனர். தொடர்ந்து, இனி இப்படி நடக்காது என, அரசு பஸ் ஓட்டுனர், நடத்துனர் கூறியதால், பஸ் விடுவிக்கப்பட்டது.
மேலும்
-
டில்லிக்கு நேரடி விமான சேவை துவங்குகிறது 'ஏர் சீனா'
-
ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் ஈரான் அதிபரிடம் மோடி வலியுறுத்தல்
-
பா.ஜ.,வின் 'பி டீம்' தான் காங்கிரஸ் கேரள முதல்வர் பினராயி குற்றச்சாட்டு
-
அரசு அதிகாரி தற்கொலை வழக்கு பஞ்சாப் அமைச்சர் ராஜினாமா
-
அனுமதிக்க மாட்டோம்!
-
இதே நாளில் அன்று