ரமலான் பண்டிகை கொண்டாட்டம்: இஸ்லாமியர்கள் உற்சாகம்
திருப்பூர்; ரமலான் பண்டிகை திருப்பூரில் நேற்று கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களிலும் நடந்த சிறப்பு தொழுகைகளில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் 30 நாள் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டது. இதன் நிறைவாக ஈத் பெருநாள் எனப்படும் ரமலான் பண்டிகை நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
அவ்வகையில், திருப்பூரில் இஸ்லாமியர்கள் ரமலான் பண்டிகையை நேற்று கொண்டாடினர். சுன்னத் ஜமாத் சார்பில் திருப்பூரில் உள்ள, 48 பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருப்பூர் மாவட்டம் முழுவதும், 29 இடங்களிலும், தாருல் தவ்ஹீத் ஜமாத் சார்பில் பத்து இடங்களிலும் நேற்று காலை சிறப்பு கூட்டுத் தொழுகை நடைபெற்றது. பள்ளி வாசல்கள் மட்டுமின்றி நொய்யல் பள்ளிவளாகம் உள்ளிட்ட சில இடங்களில் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனர். சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் எனப் பலரும் ஈத் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.மக்களிடையே மனிதநேயம் தழைத்தோங்கவும், நாட்டு மக்கள் அனைவரும் நோயின்றி ஒற்றுமையுடனும், நலமுடன் வாழவும் வேண்டி கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமிய மக்கள், 'ஈத் முபாரக்' எனக் கூறி ஒருவரையொருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். ஈகைப் பண்பை நிலைநாட்டும் வகையில், ஏழை எளியவர்களுக்குப் புத்தாடை மற்றும் உணவுப் பொருட்களையும் அவர்கள் வழங்கினர்.
தேவராயன்பாளையம்
திருமுருகன்பூண்டி நகராட்சி, தேவராயன்பாளையத்தில் மஸ்ஜிதே குபா ஈத்கா பள்ளி மைதானத்தில் ரம்ஜான் திருநாளை முன்னிட்டு பள்ளிவாசல் இமாம் ஜாபர் சாதிக் முன்னிலையில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமிய இயக்கங்கள் சார்பாக கொடியேற்றுதல் நடந்தது. தொழுகையில் பங்கேற்றவர்களுக்கு பழரச பானங்கள் வழங்கப்பட்டது. பள்ளிவாசல் தலைவர் சலீம் பாய், முத்தவல்லி உமர் சாலி, செயலாளர் முஸ்தபா, பொருளாளர் ஜபருல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.