வேம்படிதாளம் ரயில் சுரங்கப்பாதைக்கு தீர்வில்லை
வேம்படிதாளம் ரயில் சுரங்கப்பாதை பிரச்னைக்கு தீர்வு காணாததால், அதன் சுற்றுப்பகுதி மக்கள், தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து பேனர் வைத்தனர். அதை, வருவாய்த்துறையினர் அகற்றினர்.
சேலம் மாவட்டம் காகாபாளையம் - இளம்பிள்ளை பிரதான சாலையில் உள்ள, வேம்படிதாளத்தில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. அது கட்டி, 50 ஆண்டுக்கு மேலான நிலையில், சாலையில் இருந்து பள்ளமான பகுதியாக மாறியுள்ளது.இதனால் சாக்கடை கழிவுநீர், மழைநீர் செல்லும்போது, வேம்படிதாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர், அந்த பாலத்தை கடக்க சிரமப்படுகின்றனர். இளம்பிள்ளை செல்லும் ஏராளமான வாகனங்களும், பாலத்தை சிரமத்துடன் கடக்க வேண்டிய சூழல் உள்ளது. பேனர் அகற்றம்
இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல், மழைக்காலங்களில் போக்குவரத்து துண்டிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல ஆட்சிகள் மாறியும் பிரச்னைக்கு தீர்வு காணப்படாததால், வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து, நேற்று முன்தினம் இரவு அதுகுறித்த அறிவிப்பு செய்து, சுரங்கப்பாதை அருகே, அதன் சுற்றுப்பகுதி மக்கள், பேனர்களை
வைத்தனர்.
தொடர்ந்து நேற்று மதியம், அங்கு வந்த வருவாய் ஆய்வாளர் அம்பிகா தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள், அந்த பேனர்களை அகற்ற முயன்றனர். மக்கள் தடுக்கவே, வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் வலுக்கட்டாயமாக, பேனர்களை கிழித்து எடுத்து சென்றனர்.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'எந்த கட்சியினரும், இப்பாலத்துக்கு தீர்வு காணவில்லை. தினமும் ஆயிரக் கணக்கானோர் அவதிக்கு ஆளாகிறோம். மழைக்காலங்களில் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதற்கு தீர்வு காண, தேர்தல் புறக்கணிப்பை அறிவித்தால், அதை வருவாய்த்துறையினர் அகற்றிவிட்டனர். இருப்பினும் முடிவில் மாற்றமில்லை. தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடு படுவோம்' என்றனர்.
மேலும்
-
கடல் தாமரை நுாலகம் பூஜை அறைக்கு சமமானது ஆன்மிக எழுத்தாளர் சுவாமிநாதன் நெகிழ்ச்சி
-
'இளம் தலைமுறையினர் அறிவு செல்வம் வளர்க்கும் கடல் தாமரை புத்தக பூங்கா'
-
உடல் நலம் பாதித்த 'ரீல்ஸ்' பாட்டி மரணம்
-
நெடுஞ்சாலையோர தடுப்புகளின் உயரம் அதிகரிக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
-
மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ரூ.40 கோடியில் தனியார் பெயர்
-
இன்று இனிதாக...