நெடுஞ்சாலையோர தடுப்புகளின் உயரம் அதிகரிக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

சோழவரம்: சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரங்களில் உள்ள இரும்பு தடுப்புகளின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சோழவரம் அடுத்த செம்புலிவரம், தேவனேரி ஆகிய பகுதிகளில், சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகள் 1 அடிக்கும் குறைவாகவே உள்ளன.

இதனால், இணைப்பு சாலைகளில் இரை தேடும் கால்நடைகள், உயரம் குறைவாக உள்ள தடுப்புகளை கடந்து, சாலை மைய பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. அச்சமயங்களில் சாலையில் வேகமாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். மேலும், இப்பகுதிகளில் உள்ள சாலை தடுப்புகளை பாதசாரிகள் எளிதாக கடந்து, தேசிய நெடுஞ்சாலையை ஆபத்தாக கடந்து செல்கின்றனர். இதனால், மேற்கண்ட பகுதிகளில் விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, நெடுஞ்சாலையோர தடுப்புகளின் உயரத்தை அதிகரிக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement