அண்டா, குண்டா, மிக்சி கொடுத்து ஏமாற்ற நினைக்கின்றனர்: சீமான்

சென்னை;''அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் தரமில்லை என்றால், தரமற்றவர்களின் கையில் அதிகாரம் இருப்பது தான் காரணம்,'' என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ள சீமான், நேற்று திருத்தணியில், தன் பிரசாரத்தை துவக்கினார். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று காலை குடும்பத்துடன் வழிபட்ட அவருக்கு, கட்சியினர், மூன்றரை அடி உயர வேல் வழங்கினர். அதை கையில் ஏந்தியவாறு, மூலவரை சீமான் வழிபட்டார். பின், முருகன் பாடலை பாடி, மாலையில் பிரசாரத்தை துவக்கினார்.

அப்போது, அவர் சீமான் பேசியதாவது:

டாக்டர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் என எல்லாரும் போராடி கொண்டிருக்கின்றனர். இத்தனை போராட்டத்தை தந்தவர்கள், நல்லாட்சி என்கின்றனர். மகளிருக்கு 5,000 ரூபாயை, யார் பணத்தில் கொடுத்தனர். அவர்கள் பணம் கொடுத்து ஓட்டை உறுதி செய்கின்றனர்.

தமிழகத்தில் தனியார் பள்ளி, கல்லுாரிகள் தரமாக இருக்கின்றன; அரசு நடத்தும் பள்ளி, கல்லுாரிகள் தரமற்றவையாக இருக்கின்றன. தரமற்றவர்களின் கையில் அதிகாரம் இருப்பதே, இதற்கு காரணம்.

முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு உடலுக்கு முடியவில்லை என்றால், தனியார் மருத்துவமனைக்கு போகின்றனர். அரசு மருத்துவமனைகள் தரமில்லை. தனியார் முதலாளிகளால் தரமான மருத்துவத்தை கொடுக்கும்போது, அரசால் முடியவில்லை என்றால், அந்த அரசு தோற்று போகிறது.

மக்களுக்கு அண்டா, குண்டா, மிக்சி என, எதையாவது கொடுத்து ஏமாற்ற நினைக்கின்றனர். இந்நிலையை எப்படியாவது மாற்ற வேண்டும் என நினைக்கிறோம். இந்த இரண்டுக்கும் இடையே தான் போட்டி. ஜாதி, மதம், பணம் அடிப்படையில் அரசியல் செய்கிறவர்களிடம், ஒழுக்கம், பண்பாடு எங்கே இருக்கும்?

இதுவரை, ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல், நல்லாட்சி வர வேண்டும் என தொடர்ச்சியாக போராடுகிறோம். ஒரு சதவீதம் கூட, ஓட்டு இல்லாதவர்களிடம், எவ்வளவு பேரம் பேசப்படுகிறது என்பதை பார்த்திருப்பீர்கள். அப்படி என்றால், 36 லட்சம் ஓட்டு வைத்திருக்கும் எங்களிடம் எவ்வளவு பேரம் பேசப்பட்டிருக்கும்?

பணமா, இனமா என்றால், நான் பிறந்த இனம் தான் முக்கியம். வாழ்க, ஒழிக கோஷம் போடுவதும், ஐந்து பத்துக்கும், அண்டா, குண்டா வாங்கி கொண்டு ஓட்டுப் போடுவதும் தன்மான இழுக்கு. தன்மானத்தை ஒருபோதும் தமிழன் அடமானம் வைக்க மாட்டான்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பேட்டியளித்த சீமான், “திருத்தணி முருக பெருமான், 'என்னை நம்பினோர் அஞ்சுவதில்லை' என கூறியுள்ளார். அதற்காக தான் தேர்தல் என்னும் போர் களத்தில், பிரசாரத்தை திருத்தணியில் துவங்கியுள்ளேன். மற்றவர்களுக்கு இது தேர்தல், எங்களுக்கு இது போர் என்பதால், முருகப்பெருமானை வணங்கி விட்டு பிரசாரம் துவங்குகிறேன்,” என்றார்.

Advertisement