புதைகுழிக்குள் புதுச்சேரி த.வெ.க.,

4


- நமது நிருபர் -


நடிகர் விஜய், த.வெ.க.,வை துவங்குவதற்கு முன்பே, 'புஸ்ஸி' ஆனந்த் உடன் நெருக்கமான உறவில் இருந்தார். இருவரும் தொழில் பங்காளிகள் என்பது புதுச்சேரியில் பலருக்கும் தெரிந்த விஷயம்.


புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் என்ற கட்சியில் இருந்த ஆனந்த், பின்பு என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார். கடந்த 2016ல் என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக, புதுச்சேரியின் உப்பளம் தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப்போனார். தொடர்ந்து அந்த கட்சியில் இருந்து வந்த ஆனந்த், 2022ல் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமியிடம் விஜயை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின், விஜயும் ரங்கசாமியும் மிகவும் நெருக்கமாகி விட்டனர்.


த.வெ.க.,வை துவங்கிய பின்னும் ரங்கசாமியுடனான நட்பை விஜய் மறக்கவில்லை. இதற்கிடையே த.வெ.க., பொதுச் செயலரான ஆனந்த் ஒரு பக்கம், புதுச்சேரியில் ஆட்சியை எளிதாக பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு மும்முரமாக வேலை பார்க்க, விஜய் அதில் ஆர்வம் காட்டவே இல்லை.

கோபம் இல்லை





அந்த நேரம் தான் கரூர் துயர சம்பவம் நடந்தது. அதன்பின், கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் விஜய் வெளியே வரவில்லை. தமிழகத்தில் எங்குமே அவருக்கு கூட்டம் நடத்த அனுமதி கிடைக்கவில்லை. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, புதுச்சேரியில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்கிறேன் என, ஆனந்த் தெரிவித்தார். அப்படியாவது விஜயை, புதுச்சேரி அரசியலில் ஈடுபடுத்த எண்ணினார்.


கடந்த டிச., 9ம் தேதி, புதுச்சேரியில், விஜய் கூட்டம் நடந்தது. தமிழகம் போல், அங்கும் அரசு கடுமையான நெருக்கடி கொடுத்தது. இருப்பினும், ரங்கசாமி அரசு மீது விஜய்க்கு கோபம் வரவில்லை. புதுச்சேரி கூட்டத்திலும் தி.மு.க.,வை திட்டினாரே தவிர, ஆளும் என்.ஆர். காங்கிரஸ், - பா.ஜ., அரசை, விஜய் விமர்சிக்கவில்லை. ஆளும் அரசை விமர்சிக்காமல் எப்படி அரசியல் செய்வது என விஜயிடம், ஆனந்த் நேரடியாகவே கேட்டதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


கூட்டத்திற்கு பின், புதுச்சேரியில், த.வெ.க.,வின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்தது. பல ஒயின்ஷாப் அதிபர்களும், கிரானைட் அதிபர்களும், த.வெ.க.,வுக்கு ஆதரவு கரம் நீட்டினர். இது, என்.ஆர்.காங்., - பா.ஜ., காங்கிரஸ் - தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., வுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.


விஜய்க்கு திரண்ட பெண்கள்




ஆதரவை பார்த்து தான், மகளிர் உரிமை தொகையை, 2,500 ரூபாயாக ரங்கசாமி உயர்த்தினார். அத்துடன், பெண்களை மையப்படுத்தி அனைத்து திட்டங்களையும் மாற்றினார். விஜய்உடன் கூட்டணி வைக்க விரும்பினார்.


தனித்தன்மை குலையும்





உற்சாகத்தில், ஆனந்தும் புதுச்சேரியில் வலம் வந்தபடியே இருந்தார். அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கியதும், புதுச்சேரியில் ஆட்சியை பிடித்தார். அதன் பின்னர்தான், தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார். விஜயும் அதை நோக்கியே பயணப்படுவார் என நினைத்தார். ஆனால், விஜயின் அடுத்தடுத்த செயல்பாடுகள் அப்படி அமையவில்லை.


த.வெ.க.,விற்கு கிடைத்த ஆதரவை பார்த்து, ஆளும் பா.ஜ., உட்பட பல கட்சிகளில் இருந்தவர்கள் த.வெ.க.,வில் சேர முற்பட்டனர். பா.ஜ., மாநில தலைவரும் நியமன எம்.எல்.ஏ.,வுமான சாமிநாதன்; பா.ஜ., மாநில செயலர் பி.ராமு; பா.ஜ., - எம்.எல்.ஏ., சாய் சரவணன் உள்ளிட்ட பலர் அதில் அடக்கம். ஆனால், இவர்கள் வந்தால் த.வெ.க.,வின் தனித்தன்மை சீர்குலைந்துவிடும் என்பது ஆனந்தின் கருத்து.


கண்டுகொள்ளாத விஜய்





ஆனந்தின் தடையையும் மீறி, ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனா வாயிலாக, விஜயை இவர்கள் தொடர்புகொண்டு தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். விஜயும், ஆனந்தின் கருத்தை பொருட்படுத்தாமல் அவர்களை கட்சியில் சேர்க்க ஒப்புதல் அளித்துவிட்டார். இருப்பினும் இன்றுவரை இவர்களில் பலரை விஜய் சந்திக்கவில்லை. அவர்களை பற்றி தெரிந்துகொள்ளவும் இல்லை. இதெல்லாம் ஆனந்தின் அதிருப்தியை அதிகரித்துக்கொண்டே போனது.


தமிழகத்திலேயே கட்சி நிர்வாகத்தில் ஆர்வம் காட்டாத விஜய், புதுச்சேரி பற்றி முற்றிலும் கண்டுகொள்ளவில்லை. அங்கே மாநில தலைவரைக் கூட நியமிக்கவில்லை. கட்சி துவங்கி இரண்டு ஆண்டுகளுக்கு பின், கடந்த மாதம் தான், அதுவும் தேர்தல் நெருக்கடியால், புதுச்சேரிக்கு நிர்வாக குழுவை விஜய் அமைத்தார். 16 பேர் கொண்ட அந்த குழு ஆனந்த் தலைமையில் இயங்கி வருகிறது. அதிலும் ஆளுக்கு ஒரு பக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.


எது எப்படிப்போனாலும், விஜய்க்கும் ரங்கசாமிக்கும் உள்ள நட்பால் கூட்டணி அமைந்துவிடும், கவலை இல்லாமல் ஜெயத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் த.வெ.க.,வினர் இருந்தனர். தேர்தலில் போட்டியிட முண்டியடித்தனர்.


அதற்கு ஏற்ப, ரங்கசாமியும் பா.ஜ.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தாமல் டிமிக்கி கொடுத்து வந்தார். 'புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரவில்லை' என்றெல்லாம் நொட்டையும் சொல்லி நழுவப் பார்த்தார். ஏற்கனவே, கட்சி நிர்வாகிகள் ஓட்டத்தால் கிலியில் இருந்த பா.ஜ., டில்லியில் இருந்து வலுவான ஏவுகணைகளை அனுப்பி, ரங்கசாமியின் திட்டங்களை நசுக்கிவிட்டது. இதில் விஜயும், கூட்டணிக்கு அதிக ஆர்வம் காட்டாததும் பிரச்னை என்கின்றனர் த.வெ.க.,வினர்.


தற்கொலைக்கு சமம்





சரி, என்.ஆர்.காங்கிரஸ் இல்லாவிட்டால் காங்கிரசுடனாவது கூட்டணி அமைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் த.வெ.க.,வினர் இருந்தனர். அதுவும் நடக்கவில்லை. போகட்டும், கூட்டணி இல்லாவிட்டால் பரவாயில்லை, விஜய்க்கு உள்ள ஆதரவை வைத்து பார்த்துக்கொள்ளலாம் என, கட்சியினர் தைரியம் சொல்லிக்கொண்டனர். ஆனால், அனைவருக்கும் இந்த தைரியம் வரவில்லை. 'புதுச்சேரியில் தனித்து போட்டியிடுவது, தற்கொலைக்கு சமம்' என்று கூறி, வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட பலரும் பின்வாங்க தொடங்கினர்.


இதே நேரம் தான், உயர்மட்ட குழு ஆலோசனையில், 'புதுச்சேரியில் நாம் கண்டிப்பாக போட்டியிட வேண்டுமா? நாம் போட்டியிட்டால் ரங்கசாமியின் வெற்றி சிரமமாகாதா?' என, விஜய் கேள்வி எழுப்பினார். அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள், 'புதுச்சேரி தேர்தலை புறக்கணித்தால், அரசியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தும்' என, அறிவுறுத்தினர்.

சுடச்சுட வேட்பாளர்





அதனால் தான், வேண்டா வெறுப்பாக வேட்பாளர்களை தேர்வு செய்து, கடைசி நிமிடம் வரை, வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் தள்ளிப் போட்டார். அதிலும், பிற கட்சியில் இருந்து வந்த இறக்குமதி வேட்பாளர்களே அதிகம். பா.ஜ.,வில் இருந்து 22ம் தேதி மதியம் விலகிய, தற்போதைய எம்.எல்.ஏ., சாய் சரவணன், த.வெ.க.,வில் சுடச்சுட வேட்பாளராக்கப்பட்டு உள்ளார். பெண்கள் மத்தியில் அபார ஆதரவு இருந்தும், இரண்டே பெண்களை தான் நிறுத்தி இருக்கிறார். தேர்தலில் அனுபமே இல்லாதவர்களும் வேட்பளர்களாகி உள்ளனர்.


வேட்பாளர் தேர்வு எவ்வளவு வேண்டா வெறுப்பாக நடந்துள்ளது என்றால், நேற்று த.வெ.க.,வுடன் கூட்டணி வைத்த 'நேயம் மக்கள் கட்சி' என்ற கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் ஒன்று மிக முக்கியமான தட்டாஞ்சாவடி தொகுதி. மற்றொன்று உருளையன் பேட்டை. இவற்றுக்கு ஏற்கனவே த.வெ.க., சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் பின்வாங்கச் செய்யப்பட்டனர்.

வீண் செலவு வேண்டாம்





'அரசியலில் எதுவும் நடக்கும், எது எப்படி போனாலும், விஜயக்கான ஆதரவு மங்கவில்லை, வரும் ஏழாம் தேதி வரை நேரம் இருக்கிறது, விஜய் 10 நாள் பிரசாரம் செய்தால் புதுச்சேரியை அள்ளிவிடலாம்' என்ற நம்பிக்கையோடு, ஆனந்த், விஜயை அணுகியபோது, வெறும் இரண்டு பொதுக்கூட்டங்களுக்கு மட்டும் தான் அவர் சம்மதம் தெரிவித்தார். மொத்த புதுச்சேரியையும், இரண்டு நாளில் சுற்றி வந்துவிடலாம். ஆனால், அதைக்கூட விஜய் செய்ய தயாராக இல்லை என்பதால், 'எப்படியும் வெற்றிபெற முடியாது. வீணாக செலவு செய்ய வேண்டாம்' என்ற முடிவுக்கு பல த.வெ.க., வேட்பாளர்கள் வந்துவிட்டனர்.


'ரங்கசாமி வெற்றியை பாதித்துவிடக் கூடாது என நினைக்கும் விஜய், புதுச்சேரியில் கட்சி துவங்காமல் இருந்திருக்கலாம். தப்பித்தவறி கூட வெற்றி பெற்றுவிடக் கூடாது என நினைக்கிறார். ரங்கசாமி மீதான பாசம் என்ற பெயரில், பா.ஜ., வெற்றிக்கு மறைமுகமாக உதவுகிறார். அதோடு தன்னை நம்பியிருக்கும் புதுச்சேரி த.வெ.க.,வினரையும் சேர்த்து, புதைகுழிக்குள் தள்ளுகிறார்' என்று புதுச்சேரி த.வெ.க.,வினர் புலம்புகின்றனர்.

Advertisement