புதுச்சேரியில் இண்டி கூட்டணி... உடைகிறது?: 'சுவிட்ச் ஆப்' செய்து வேட்பாளர்கள் மாயம்
புதுச்சேரியில் இண்டி கூட்டணியில் காங்., - தி.மு.க., அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்ததால் குழப்பம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தையும் ஜவ்வாக இழுத்தது. பலகட்ட பேச்சுவார்த்தை பின் தொகுதி பங்கீடு முடிவு எட்டப்பட்டது.காங்., - 16, தி.மு.க., - 12, இந்திய கம்யூ., மற்றும் வி.சி., தலா ஒரு தொகுதி என முடிவாகி உள்ளது.
இருப்பினும், தொகுதி பங்கீடு ஜவ்வாக இழுத்ததால், பல்வேறு தொகுதிகளில் கடந்த 16ம் தேதி முதல், இரு கட்சி வேட்பாளர்களும் கட்சி சார்பில் 'ஏ' மற்றும் 'பி' படிவத்துடன் மனு தாக்கல் செய்தனர். கடைசி நாளான நேற்றும்கூட இரு கட்சி வேட்பாளர்களும் ஆதரவாளர்கள் புடை சூழ சென்று மனு தாக்கல் செய்தனர்.
காங்., கட்சியை பொருத்தவரை 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை 'ஏ' மற்றும் 'பி' படிவத்துடன் களம் இறக்கி விட்டுள்ளது. தி.மு.க.,வும் பெரும்பாலான தொகுதிகளுக்கு 'ஏ' மற்றும் 'பி' படிவம் கொடுத்து வேட்பாளர்களை மனு தாக்கல் செய்ய சொல்லி விட்டது.
இந்த மனு தாக்கல் தான் இப்போது இண்டி கூட்டணியில் பெரிய சிக்கலையும், புது தலைவலியையும் ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி தொகுதி பங்கீடு இறுதியானது குறித்த அறிவிப்பை, புதுச்சேரி தி.மு.க., பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதையடுத்து, 'ஏ' மற்றும் 'பி' படிவத்தை வாரி வழங்கிய காங்., -தி.மு.க., கட்சிகள் தங்களது வேட்பாளர்களை வாபஸ் பெற சொல்ல துவங்கி விட்டன.
ஆனால் 'பி' படிவத்துடன் மனு தாக்கல் செய்த இரு கட்சிகளின் வேட்பாளர்களில் பலர மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' ஆகி உள்ளது. இதனால், அவர்கள் எங்கே இருக்கின்றனர் என்பது தெரியவில்லை.
அவர்களை இரு கட்சிகளிலும் தேடி வருகின்றனர்.
அவர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெறாவிட்டால் இண்டிகூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்தும் கூட உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, சட்ட வல்லுனர்கள் கூறியதாவது:
தேர்தல் நடைமுறை தெரியாமல் காங்.,-தி.மு.க., கட்சி 'பி' படிவத்தை வாரி வழங்கி விட்டனர்.
இதுதான் இவ்வளவு குழப்பத்திற்கும் காரணம். ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தலில் நிற்கும் வேட்பாளருக்கு ஒரு 'ஏ' படிவம் மற்றும் இரண்டு 'பி' படிவத்தை வழங்கும். இதில் 'ஏ' படிவம் ஒன்றையும், 'பி' படிவம் ஒன்றையும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கட்சியின் வேட்பாளர் சமர்ப்பிக்க வேண்டும்.
மற்றொரு 'பி' படிவத்தை தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இல்லையெனில், அனைத்து தொகுதிகளிலும் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலுடன் 'பி' படிவத்தை கொடுக்க வேண்டும்.
அதுவும் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால். மனு தாக்கல் முடியும் 2:55 மணிக்கு முன்பாக அந்த பட்டியலை அரசியல் கட்சிகள் கொடுத்திருக்க வேண்டும். இல்லையெனில், அரசியல் கட்சி வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் சமர்பித்த 'பி' படிவம் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
இனி அரசியல் கட்சிகள் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. மனு தாக்கல் செய்தஅந்தந்த கட்சி வேட்பாளர்கள் நினைத்தால் மட்டுமே வாபஸ் பெற முடியும். அந்த நிலைமை தான் இப்போது காங்., தி.மு.க., கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை ஒரு தொகுதிக்கு ஒரே கட்சியை சேர்ந்த 2 பேர் 'பி' படிவத்துடன் மனுதாக்கல் செய்திருந்தால், முதலில் தாக்கல் செய்த வேட்பாளர்களின் மனு ஏற்றுக் கொள்ளப்படும். 2வது மனு நிராகரிக்கப்படும்.
மனு பரீசிலனையில் இந்த நடைமுறை தான் பின்பற்றப்படும்.ஒரு வேளை காங்., -தி.மு.க., வேட்பாளர்கள் ஒருமித்த கருத்து ஏற்பட்டு வாபஸ் பெறாவிட்டால், கஷ்டம் தான். இரண்டு கட்சிகளும் தேர்தலில் ஒரே தொகுதியில் நிற்க வேண்டி இருக்கும்
இவ்வாறு சட்ட வல்லுனர்கள் தெரிவித்தனர்.
மனுக்கள் மீது இன்று 24ம் தேதி பரிசீலனை நடக்கிறது. 26ம் தேதிக்குள் மனுவை வாபஸ் பெற வேண்டும். அதற்குள் இரு கட்சி வேட்பாளர்களையும் சமாதானப்படுத்தி வாபஸ் பெற முயற்சி நடக்கிறது.
சில வேட்பாளர்கள் தங்களது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ள சூழ்நிலையில் அவர்களை சமாதானப்படுத்த தனி 'டீம்' இறக்கி விடப்பட்டுள்ளனர்.
அவர்கள் மனுக்களை வாபஸ் பெறாவிட்டால்தொகுதி பங்கீடு முடிந்தும் கூட இண்டி கூட்டணி உடைந்து தனித்தனியே நிற்கும் சூழல் உருவாகி விடும்.
@block_B@
இது ஒரு கட்சி தனது வேட்பாளர்களுக்கு படிவம் 'பி' வழங்க யாரை அங்கீகரித்துள்ளது என்பதைத் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கும் கடிதம் . கட்சியின் தேசிய அல்லது மாநில தலைவர் அல்லது பொதுச்செயலாளர் இதனை வழங்குவார். வேட்பாளர்களுக்கு 'பி' படிவத்தில் கையெழுத்திட கட்சி சார்பில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
இது குறிப்பிட்ட தொகுதியில் கட்சி சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும் படிவம். இப்படிவத்தை சமர்ப்பித்தால் மட்டுமே அந்த வேட்பாளருக்குக் கட்சியின் சின்னம் ஒதுக்கப்படும். படிவம் ஏ'-வில் குறிப்பிட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட நபர் இதில் கையெழுத்திடுவார். மனுத் தாக்கல் செய்யும் கடைசி நாளன்று மதியம் 3 மணிக்குள் இப்படிவத்தை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை முதன்மை வேட்பாளரின் மனுத் தள்ளுபடி செய்யப்பட்டால், அதே கட்சியைச் சேர்ந்த மாற்று வேட்பாளர் ஒருவரையும் 'பி' படிவத்தில் குறிப்பிட வாய்ப்பு உண்டு.block_B