ஈஸ்ட் பெங்கால் கோல் மழை * ஐ.எஸ்.எல்., கால்பந்தில்...
கொல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் கோல் மழை பொழிந்த ஈஸ்ட் பெங்கால் அணி 7-0 என்ற கணக்கில், முகமதன் ஸ்போர்ட்டிங் கிளப் அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. நேற்று கொல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் ஈஸ்ட் பெங்கால், முகமதன் ஸ்போர்ட்டிங் கிளப் அணிகள் மோதின.
போட்டி துவங்கிய 6வது நிமிடத்தில் அன்வர் அலி முதல் கோல் அடித்தார். மறுபக்கம் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட, 14வது நிமிடம் ஈஸ்ட் பெங்கால் அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய யூசெப், கோல் அடித்தார். தொடர்ந்து 38 வது நிமிடம் கிடைத்த மற்றொரு 'பெனால்டி' வாய்ப்பில், சால் கிரெஸ்போ கோல் அடிக்க, முதல் பாதியில் ஈஸ்ட் பெங்கால் 3-0 என முந்தியது.
இரண்டாவது பாதியில் மீண்டும் அசத்திய யூசெப் (55வது) மற்றொரு கோல் அடித்தார். அடுத்து 75 வது நிமிடத்தில் விஷ்ணு, 79 வது நிமிடத்தில் அன்வர் அலி கோல் அடித்தனர்.
போட்டியின் கடைசி 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் நந்தா (90+6வது நிமிடம்) தன் பங்கிற்கு ஒரு கோல் அடிக்க, ஈஸ்ட் பெங்கால் அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
6 போட்டியில் 3 வெற்றியுடன் (2 'டிரா', 1 தோல்வி), 11 புள்ளி பெற்ற ஈஸ்ட் பெங்கால் அணி, பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. முகமதன் அணி (5ல் தோல்வி) கடைசி இடத்தில் உள்ளது.