ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் அமோக ஆதரவுடன் ஆணவ கொலை தடுப்பு மசோதா நிறைவேற்றம்

பெங்களூரு: ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அமோக ஆதரவுடன், ஆணவ கொலையை தடுக்கும் மசோதா, சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

கலப்பு திருமணம் செய்வோர், ஆணவ படுகொலை செய்யப்படுவதை தடுக்கும் மசோதா, சட்டசபையில் கடந்த, 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது சட்ட அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் நேற்று பேசுகையில், ''மனதிற்கு பிடித்தவர்களை தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். ஜாதி மறுப்பு திருமணம் செய்வோர் ஆணவ கொலை செய்யப்படுகின்றனர். இதனை தடுக்க மசோதா கொண்டு வந்துள்ளோம். அனைவரும் ஒப்புதல் அளிக்க வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு நாம் முன்மாதிரியாக திகழ வேண்டும்,'' என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசுகையில், ''பழைய மைசூரு பகுதியில், ஆணவ கொலை அடிக்கடி நடக்கிறது. இதனை தடுக்க சட்டம் கொண்டு வருவது நல்லது என்று நினைக்கிறேன். நீங்கள் மசோதா கொண்டு வந்து உள்ளீர்கள். ஏற்கனவே பி.என்.எஸ்., சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த சட்டத்தின் மூலம் என்ன பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்,'' என்றார்.

கார்கலா பா.ஜ., உறுப்பினர் சுனில்குமார் பேசுகையில், ''நீங்கள் எல்லாவற்றிக்கும் மசோதா கொண்டு வருகிறீர்கள். ரோகித் வெமுலா பெயரில் மசோதா கொண்டு வந்தீர்கள். இப்போது 'இவர் நம்மவர ் ' என்ற பெயரில் மசோதா கொண்டு வந்து இருக்கிறீர்கள். இதில், புதிதாக என்ன இருக்கிறது என தெளிவுபடுத்துங்கள்,'' என்றார்.

மீண்டும் எச்.கே.பாட்டீல் பேசுகையில், ''எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மசோதாவில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்துவோம்,'' என்றார்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஏகமனதாக ஆதரவு தெரிவித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Advertisement