செங்கையில் 3 டாஸ்மாக் கடை அகற்றுவதில்... அலட்சியம்: 5 ஆண்டுகள் போராடியும் தீர்வு கிடைக்கல
செங்கல்பட்டு:செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள, 3 டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்யாததால், தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கடையை இடமாற்றம் செய்ய, கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் கலெக்டர், அரசிடம் முறையிட்டும் அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டில், மாவட்டத்தின் மையப்பகுதியில், கலெக்டர் அலுவலகம், முதன்மை மாவட்ட நீதிமன்றம், ரயில் நிலையம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, மாவட்ட காவல் அலுவலகம், அரசு சட்டக்கல்லுாரி, ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி, நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன.
வங்கிகள், தனியார் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. அதுமட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிக்கு, செங்கல்பட்டு நகரை சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த பத்தாயிரத்தும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலை வழியாக தினமும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோர், அத்தியவாசிபணி, கார், இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், புதிய பேருந்து நிலையம் அருகில், இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. டாஸ்மாக் கடைக்கு வரும் வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
இதனால், அப்பகுதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
குடிப்போதையில் செல்லும் குடி மகன்கள், அவ்வழியாக வரும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் சம்பவங்கள் நடக்கின்றன. குடிமகன்கள் போதை தலைக்கு ஏறியதும், மதுபாட்டில்களை சாலையில் போட்டு உடைக்கின்றனர்.
அவ்வழியாக செல்லும், பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். டாஸ்மாக் கடைக்குள் அருகில், குடிமகன்கள் மோதிக்கொள்கின்றனர்.
இதனால் அடிக்கடி சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. இதுதொடர்பாக, நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதேபோல் செங்கை பழைய பஸ் நிலையம் அருகே ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் அருகாமையில், டாஸ்மாக் கடைகள் இயங்கினால், அகற்ற வேண்டும் என, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், ஜி. எஸ்.டி., சாலையில், டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய, மாவட்ட கலெக்டர், முதல்வர் மற்றும் அமைச்சர் ஆகியோரிடம், கடந்த, 5 ஆண்டுகளாக, சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர்.
இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பெண்கள், பொது மக்கள் நலன்கருதி, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.
கூடுவாஞ்சேரியில், ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. தவிர, ஆண்கள் மேல்நிலை பள்ளியும் உள்ளது.
சாலை ஓரத்திலேயே அமைந்துள்ள இந்த கடையில் மது அருந்தும் நபர்களால், பள்ளி மாணவியர் கிண்டல், கேலிக்கு ஆட்படுவதால், இந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, கடந்த 20 ஆண்டிற்கு மேலாக தொடர் புகார்கள் வந்தும், மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுபோல், ஊரப்பாக்கம், காரணை புதுச்சேரி சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை வாடிக்கையாளர்களால் சாலையில் செல்லும் பெண்கள், வாகன ஓட்டிகள் பலவித இடையூறுக்கு ஆட்பட்டு வருகின்றனர். இந்தக் கடையையும் மூட வேண்டும் என, 15 ஆண்டிற்கு மேலாக பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
மேலும்
-
நான் திரள் நிதி வாங்குகிறேன்; நீ திருட்டு நிதியில் கட்சி நடத்துகிறாய்; திமுக மீது சீமான் பாய்ச்சல்
-
ஒன்றுக்கும் உதவாத திமுக ஆட்சி; விரைவில் விடைபெறப் போகிறார் ஸ்டாலின்: விஜய் ஆவேச பேச்சு
-
லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளி கைது
-
அமோக ஓட்டு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல்; ஸ்டாலின், விஜய் வேட்பு மனு தாக்கல்
-
வேட்பாளர் தேர்வில் தேசிய கட்சிகள் திணறுவது ஏன்?