'ஜனநாயகன்' டிரைலரை தடை செய்ய தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மனு

மதுரை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடியும் வரை த.வெ.க., தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் டிரைலரை தியேட்டர்களில் திரையிட தடை விதிக்க வேண்டும்; அத்துடன் தேர்தலுக்கு பின் அப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என காங்., போர்க்கொடி துாக்கியுள்ளது.

இதுதொடர்பாக மதுரை காங்., சார்பில் தமிழக தலைமை தேர்தல் கமிஷனருக்கும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை தெற்கு சட்டசபை தொகுதி காங்., பொறுப்பாளர் செய்யதுபாபு கூறியதாவது:

இப்படத்தின் ஹீரோ விஜய், த.வெ.க., தலைவர். சட்டசபை தேர்தலில் இவரது கட்சி போட்டியிடுகிறது. இவரும் ஒரு தொகுதியில் வேட்பாளராக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஏப்.,23 சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால் தற்போது தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் டிரைலர் காட்சிகள் திரையிடப்படுகின்றன. தியேட்டர்களில் அவரது மெகா சைஸ் போட்டோக்களுடன் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. 'டிவி'யிலும் பல சேனல்களில் இந்த டிரைலர் ஒளிபரப்பப்படுகிறது.

இது தேர்தல் விதிமீறல். ஜனநாயகன் டிரைலருக்கு தடை விதிக்க வேண்டும். தேர்தல் முடியும் வரை இப்படத்தை வெளியிட தேர்தல் கமிஷனர் அனுமதிக்க கூடாது என்றார்.

Advertisement