திருமண மண்டபத்தில் வெடிகுண்டு மிரட்டல்: மணமக்கள் ஓட்டம்

திண்டுக்கல்: திருமண மண்டபத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால், மணமக்களுடன் வெளியேறிய உறவினர்கள், அவர்களுக்கு கோவிலில் திருமணம் செய்து வைத்தனர்.

திண்டுக்கல் - கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், கிழக்கு கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த சேகர் - ராணி தம்பதி மகள் கவுசல்யாவுக்கும், வேடசந்துாரை சேர்ந்த சுப்பிரமணியன் - புவனேஸ்வரி தம்பதி மகன் சரண்குமாருக்கும், திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக, இரு வீட்டாரும் முகூர்த்த நேரத்திற்கு முன்பே, மண்டபத்தில் குவிந்தனர். காலை, 9:30 மணிக்கு திண்டுக்கல் தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த, இ - மெயிலில், அந்த மண்டபத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் வந்திருந்தது. உஷாரான போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு சோதனை நடத்தினர்.

இதற்கிடையே, வெடிகுண்டு மிரட்டலால், மணமக்கள், உறவினர்கள் உட்பட அனைவரும் சீர்வரிசை, விலை உயர்ந்த பொருட்களை அப்படியே விட்டு, பதறியடித்து வெளியேறினர். முகூர்த்த நேரத்தை தவற விடக்கூடாது என்பதால், மண்டப வளாகத்தில் இருந்த கோவிலில், காலை, 10:30க்குள் மணமக்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

போலீசாரின் சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என, தெரிய வர, திருமண வீட்டார் நிம்மதி அடைந்தனர். அதன் பின், மண்டபத்தில் விருந்து உபசரிப்பு நடந்தது.

Advertisement