காங்கிரஸ் விரும்பும் தொகுதியை தி.மு.க.,வும் கேட்கிறது: செல்வப்பெருந்தகை

2

சென்னை: ''தி.மு.க., கேட்கும் தொகுதிகளை காங்கிரசும், காங்கிரஸ் கேட்கும் சில தொகுதிகளை தி.மு.க.,வும் கேட்பதால், இழுபறி நீடிக்கிறது,'' என, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 28 தொகுதிகள் எவை என்பது குறித்து, தி.மு.க., குழுவினருடன், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்., குழுவினர் பேச்சு நடத்தினர்.

அப்போது, காங்., போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை வழங்கினர்.

சந்திப்புக்கு பின், செல்வப்பெருந்தகை கூறுகையில், ''நாங்கள் கேட்ட தொகுதிகளை, அவர்களும் கேட்கின்றனர். ஒரு சில தொகுதிகள் அது போன்ற நிலையில் உள்ளன.

''சென்னையிலும் தொகுதிகள் கேட்டுள்ளோம். தொகுதிகள் பட்டியலை, காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பி ஒப்புதல் வாங்குவோம். நான் தொகுதி மாறுவதாக எங்கேயும் சொல்லவில்லை,'' என்றார்.

இதுபோல, தி.மு.க., கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகள் எவை என்பதை இறுதி செய்வதற்காக, தி.மு.க., குழுவினருடன், ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா தலைமையிலான குழுவினர் நேற்று பேச்சு நடத்தினர்.

பின், ஜவாஹிருல்லா கூறுகையில், ''ஏற்கனவே நாங்கள் போட்டியிட்டு வென்ற பாபநாசம், மணப்பாறை மற்றும் வாணியம்பாடி, திருச்சி கிழக்கு தொகுதிகளை விருப்ப தொகுதிகளாக அளித்துள்ளோம்,'' என்றார்.

இரு கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும், தொகுதிகள் விருப்ப பட்டியலை தி.மு.க.,விடம் வழங்கி உள்ளன.

Advertisement