அமைச்சரை எதிர்த்து களம் காணும் த.வா.க., குறிஞ்சிப்பாடியில் அனல் பறக்கும் தேர்தல் களம்

கடலுார்: குறிஞ்சிப்பாடி தொகுதியில் த.வா.க., தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ.,வின் தம்பி, கண்ணன் போட்டியிடுகிறார்.

கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பண்ருட்டி தொகுதியில் த.வா.க., தலைவர் வேல்முருகன், அ.தி.மு.க., வேட்பாளர் சொரத்துார் ராஜேந்திரனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். வேல்முருகன் எம்.எல்.ஏ., வின் தம்பி கண்ணன், கடலுார் மாநகராட்சி, 14வது வார்டு த.வா.க., கவுன்சிலராக உள்ளார்.

இவர், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் த.வா.க., சார்பில் போட்டியிட கட்சித் தலைமையிடம் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகுவதாக வேல்முருகன் அறிவித்து, தி.மு.க., அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தார்.

தொடர்ந்து, வரும் தேர்தலில் த.வா.க., தனித்து போட்டியிட அக்கட்சி தலைமை முடிவு செய்தது. அந்த வகையில், குறிஞ்சிப்பாடி தொகுதியில் அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு எதிராக கவுன்சிலர் கண்ணன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

இவர், தொதிக்குட்பட்ட நகரம் மற்றும் கிராமங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டுவதுடன், வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறி தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

தொகுதியில் தி.மு.க.,-அ.தி.மு.க.,-நாம் தமிழர் கட்சி, த.வா.க.,-த.வெ.க., என, 5 முனை போட்டி நிலவுவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. இதனால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அமைச்சர் பன்னீர்செல்வம், இங்கு 5 முறை வெற்றி பெற்றும் தொகுதி வளர்ச்சியடையவில்லை. இப்படி அமைச்சர் மீதான அதிருப்தி, த.வா.க., விற்கு உள்ள கணிசமாக ஓட்டு வங்கியால் தேர்தல் களம் தங்களுக்கு சாதகமாக அமையும் என, த.வா.க.,வினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

Advertisement