ஆளும் இடதுசாரியுடன் தேர்தல் அதிகாரிகள் கூட்டணி கேரள பா.ஜ., பொதுச்செயலர் சுரேஷ் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: ''கேரள தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோர், ஆளும் இடதுசாரி அரசுடன் கூட்டு சேர்ந்து, சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடப்பதை சீர்குலைக்க முயற்சி செய்கின்றனர்,'' என, மாநில பா.ஜ., பொதுச்செயலர் எஸ்.சுரேஷ் குற்றஞ்சாட்டினார்.

கேரளாவில் மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்., 9ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

சர்ச்சை இந்த தேர்தலில் ஆளும் கூட்டணிக்கும், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. சமீபத்தில், கேரளாவில் தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், பா.ஜ.,வின் முத்திரை இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, ஜெய்சல் பி.அஜீஸ் என்ற அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நேற்று, கேரள பா.ஜ., பொதுச்செயலர் எஸ்.சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஜெய்சல் பி.அஜீஸ் என்ற அதிகாரிக்கு, ஆளும் இடதுசாரியின் ஆதரவுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் தொடர்புள்ளது. மேலும், டி.ஒய்.எப்.ஐ., - எஸ்.எப்.ஐ., போன்ற அமைப்புகளுடன் தொடர்புள்ளது.

இதனாலேயே அவர் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.

பா.ஜ.,வுக்கு எதிராக திட்டமிட்ட அரசியல் சதி அரங்கேறி உள்ளது. கட்சியின் நற்பெயரை கெடுக்கவே, தேர்தல் கமிஷன் அறிவிப்பில் வேண்டுமென்றே பா.ஜ.,வின் முத்திரை இடம் பெற்றுள்ளது.

கவலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள், ஆளும் இடதுசாரி அரசுடன் கூட்டு சேர்ந்து, சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தல் நடப்பதை சீர்குலைக்க முயற்சி செய்கின்றனர்.

எங்களின் வளர்ச்சியை கண்டு கலக்கமடைந்துள்ள ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சியான காங்., கூட்டணி, பா.ஜ.,வுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் தேர்தல் கமிஷனும் ஓர் அங்கமாக இருப்பது கவலை அளிக்கிறது.

சிவன்குட்டி போன்ற அமைச்சர்கள் தேர்தல் பிரசாரத்துக்கு அரசு வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாநில தேர்தல் இயந்திரம் ஆளும் இடதுசாரி அரசின், 'பி டீம்' ஆக செயல்படுகிறது.

இந்த விவகாரத்தில், தேர்தல் கமிஷன் உடனடியாக தலையிட்டு, ஆளும் அரசுக்கு துணைபோகும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement