விசைபடகு மீனவர்கள் அடாவடியால் நாட்டு படகு மீனவர்கள் பாதிப்பு

செய்யூர்:செய்யூர் பகுதியில் கரை ஓரத்தில் விசை படகுகளில் மீன்பிடிப்பதால், நாட்டு படகு மீனவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், கடற்கரைப் பகுதி, கானத்துார் ரெட்டிகுப்பம் முதல், இடைக்கழிநாடு ஆலம்பரைகுப்பம் வரை, 75 கி.மீ., நீளம் உள்ளது. 51 மீனவப் பகுதிகள் அமைந்துள்ளன.

வாழ்வாதார தொழிலாக, 7,000க்கும் மேற்பட்ட மீனவர்கள், நாட்டுப்படகு, விசைப்படகுகளில் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கின்றனர்.

செய்யூர் பகுதியில் பெரும்பாலான மீனவர்கள் நாட்டுபடகில் சென்றே மீன் பிடித்து வருகின்றனர். ஒரு சில மீனவர்கள் மட்டுமே விசைப்படகு வைத்துள்ளனர்.

இந்நிலையில் கரையில் இருந்து 10-12 மைல்கல் துாரத்தில் விசைப்படகுகளில் மீன்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனால் விழுப்புரம் மாவட்ட மீனவர்கள், செய்யூர் பகுதியில் கரைக்கு மிக அருகில் விசைப்படகில் மீன்பிடித்து வருகின்றனர். இதனால் கரையோரத்தில் உள்ள இறால், நண்டு போன்றவற்றை விசைப்படகு மீனவர்கள் பிடித்துச் செல்கின்றனர், இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் போதிய மீன் இல்லாமல் கடும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து , விசைப்படகு மீனவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர், இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து அதே செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகையால் மீன்வளத்துறை அதிகாரிகள் கரையோரத்தில் மீன்பிடிக்கும் மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்ய வேண்டும் என நாட்டு படகு மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

--------------

Advertisement