ஈரோட்டில் பைனான்சியர் கொலையில் 3 பேர் கைதுகூலிப்படையினர் ஈடுபட்டது அம்பலம்

ஈரோடு, ஈரோட்டில் பட்டப்பகலில் பைனான்சியர் கொல்லப்பட்ட வழக்கில், மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு சூரம்பட்டி வலசு மோகன் குமாரமங்கலம் வீதியை சேர்ந்தவர் உதயகுமார், 44; திருமணம் ஆகாதவர். ஈரோடு சின்னமுத்து இரண்டாவது வீதியில் பைனான்ஸ் நடத்தினார். அலுவலகம் முன் கடந்த, 22ம் மதியம் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார், கொலையாளிகளை தேடி வந்தனர். கொலையில் கூலிப்படை ஈடுபட்டது தெரிய வந்தது.

இந்நிலையில் திண்டுக்கல், நாகர்நகர், வேடபட்டி, எஸ்.வி.கே.நகர் குமார் மகன் அன்பரசு, 32; திருப்பூர் மாவட்டம் மூலனுார், வேலம்பூண்டி ஜெகதீஷ் குமார், 43; திருநெல்வேலி நாங்குனேரி மேலகாடு அம்மன் கோவில் வீதி முத்துமாணிக்கம், 26, என மூன்று பேரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களிடம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் அடிப்படையில் விசாரணையை போலீசார் தொடர்கின்றனர்.
இதில் அன்பரசு மீது விருதாசலம் போலீசில் ஆயுத வழக்கு நிலுவையில் உள்ளது. ஜெகதீஷ் குமார் மீது அவிநாசிபாளையம், காங்கேயம், மடத்துக்குளம், தாராபுரம், கரூர் டவுன், மூலனுார் போலீஸ் ஸ்டேஷன்களில் ஒன்பது குற்ற வழக்குகள் உள்ளன. முத்துமாணிக்கம் மீது வெங்கமேடு, திலகர் திடல், நாமக்கல், நாங்குனேரி, களக்காடு போலீஸ் ஸ்டேஷன்களில் ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மூவரும் நீதிமன்ற உத்தரவுப்படி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: முத்து மாணிக்கம் கூலிப்படையை சேர்ந்தவர். மற்ற இருவரும் அவருக்கு உறுதுணையாக உதவி புரிந்தவர்கள். கொலையில் மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளனர்.
இவர்களுக்கு மூளையாக இருந்தவர்கள், கொலை செய்ய துாண்டியவர்களை கைது செய்தால்தான், காரணம் தெரியவரும். சூதாட்ட விவகாரத்தில் பெருந்தொகையை உதயகுமார் தன்வசப்படுத்தி கொண்டதால், கொலை நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தேவைப்பட்டால் சிறையில் அடைக்கப்பட்ட மூவரையும் கஸ்டடி எடுத்து விசாரிப்போம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement