ஓ.எஸ்.ஆர்., நிலத்தை வளைக்க மீண்டும் முயற்சிக்கும் மர்ம நபர்கள்

பெருங்குடி: கல்லுக்குட்டை பகுதியில், ஓ.எஸ்.ஆர்., எனும் பொது பயன்பாட்டு இடத்தை மீண்டும் ஆக்கிரமிக்கும் முயற்சி நடந்து வருவதாக, புகார் எழுந்துள்ளது.

பெருங்குடி மண்டலம், 184வது வார்டுக்கு உட்பட்ட கல்லுக்குட்டை பகுதி 220 ஏக்கர் பரப்பு உடையது. இங்கு 13,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

ஜே.ஜே.நகர், டாக்டர் அம்பேத்கர் புரட்சி நகர் உட்பட்ட இடங்களில், ஓ.எஸ்.ஆர்., எனும் பொது பயன்பாட்டிற்காக, சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அவற்றை ஆக்கிரமிக்கவோ, கட்டுமான பணிகள் மேற்கொள்ளவோ கூடாது, மாநகராட்சி ஏற்கனவே உத்தரவிட்டுஇருந்தது.

அதை மீறி சிலர், பொது பயன்பாட்டு இடத்தை ஆக்கிரமித்து, விற்று வந்தனர். இது போல் நடக்காமல் இருக்க, சென்னை மாநகராட்சி சார்பில் 30 லட்சம் ரூபாயில், 800 மீட்டர் துாரத்திற்கு, பொது பயன்பாட்டிற்கான இடத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க, ஒப்புதல் வழங்கப்பட்டது.

முதற்கட்டமாக ஜே.ஜே., நகர், டாக்டர் அம்பேத்கர் புரட்சி நகர், திருவள்ளுவர் நகர் உட்பட்ட பகுதிகளில், பொது பயன்பாட்டு இடங்களில் அத்துமீறி நுழைய தடை விதித்து, கடந்த 10ம் தேதி, மாநகராட்சி எச்சரிக்கை பலகை வைத்தது.

அந்த பலகையை உடைத்து எறிந்து, நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சி நடந்தது. இது குறித்த புகாரின்படி, மாநகராட்சி அதிகாரிகள், அகற்றப்பட்ட பலகைகளை நேற்று முன்தினம் மீண்டும் அமைத்தனர்.

இது போன்ற, சமூக விரோத செயலில் ஈடுபடும் நபர்கள் மீது, காவல் துறை கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கல்லுக்குட்டை குடியிருப்பு நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement