புவிசார் காகித கூழ் பொம்மைகள் மூலம் 100 சதவீத ஓட்டு பதிவு விழிப்புணர்வு

புதுச்சேரி: புவிசார் குறியீடு பெற்ற காகித கூழ் முகமூடி பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டி 100 சதவீத ஓட்டு பதிவு குறித்து கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் என்ற திட்டத்தின் கீழ், நுாறு சதவீத ஓட்டுபதிவினை வலியுறுத்தி, புதுச்சேரி தேர்தல் துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தேர்தல் துறையானது, பாண்டிச்சேரி கிராப்ட் பவுண்டேஷன் மற்றும் புதுச்சேரி நுண்கலை வளர்ச்சி இயக்கத்துடன் இணைந்து பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ மாணவியருக்கான புவிசார் குறியீடு பெற்ற காகித கூழ் முகமூடி பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டும் முகாமை நடத்தின.

கடற்க ரைச் சாலை, காந்தி திடல், பாரதி பூங்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாமில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்று புவிசார் குறியீடு பெற்ற காகிதக்கூழ் முகமூடி பொம்மைகளுக்கு வண்ணங்களை தீட்டினர்.

தொடர்ந்து காந்தி திடல் கைவினை அங்காடியில் நடைபெற்ற நிறைவு விழாவில் துணைத் தலைமைத் தேர்தல் அதிகாரி கந்தசாமி கலந்து கொண்டார். சிறந்த முறையில் வண்ணம் தீட்டப்பட்ட காகிதக் குழு முகமூடி பொம்மைகளுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

தேர்தல் நடத்தும் அதிகாரி ஸ்ரீஜித், சுடுமண் சிற்பக் கலைஞர் பத்மஸ்ரீ முனுசாமி மற்றும் தேர்தல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement