மேயர் பிரியா மற்றும் 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள் ஏமாற்றம்; உழைப்புக்கு மரியாதை இல்லை என புலம்பல்

33

நமது சிறப்பு நிருபர்




சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க., நேற்று அறிவித்தது. திரு.வி.க.,நகர் தொகுதியில் எம்.எல்.ஏ.,வாகும் கனவுடன் சுற்றிச்சுற்றி பணியாற்றிய வந்த, சென்னை மேயர் பிரியாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.


மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால், தற்போது எம்.எல்.ஏ.,க்களாக உள்ள பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். உழைப்புக்கு மரியாதை இல்லை எனக்கூறி, தி.நகர் தொகுதி எம்எல்.ஏ.,வான ஜெ.கருணாநிதி, பகுதி செயலர் பதவியை ராஜினாமா செய்து, தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தி.மு.க., தலைமையகத்தில் விறுப்ப மனு தாக்கல் செ ய்தார். 'உனக்குதான் சீட்' என, அமைச்சர் ஒருவர் அளித்த வாக்குறுதியை அடுத்து, பல மாதங்களாக தொகுதியில் சுற்றிச் சுழன்று பணியாற்றி வந்தார். பணத்தைப்பற்றி கவலைப்படாமல், நலத்திட்ட உதவிகளை வழங்கி, மக்கள் மனதில் பெயரை பதியம் போட்டு வந்தார்.


கடந்த மாதம் நடந்த மாநகராட்சி கூட்டதிலும், 'மேயர் பிரியா, எம்.எல்.ஏ., வேட்பாளராக போட்டியிட உள்ளார். அவர் விரைவில் எம்.எல்.ஏ.,வாக பதவி உயர்வு பெற வாழ்த்துகள்' என, கவுன்சிலர்கள் பலர் வாழ்த்தி பேசினார். ஆனால், தி.மு.க., வேட்பாளர் பட்டியலில், அவரது பெயர் இடம்பெறவில்லை. இது, அவருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது.


அதேபோல், சைதாப்பேட்டை மற்றும் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட துணை மேயர் மகேஷ்குமார் விருப்ப மனு அளித்தார். அதில், சைதாப்பேட்டை தொகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் போட்டியிடுவதாலும், வேளச்சேரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதாலும் அவருக்கும் 'சீட்' வழங்கப்படவில்லை.

எம்.எல்.ஏ.,க்கள்



தி.மு.க., மா ணவரணியில் கட்சி பணியாற்றி, திரு.வி.க.நகர் தொகுதி எம்.எல்.ஏ.,வானவர் தாயகம் கவி. சட் டசபை யில் அதிக கேள்வி எழுப்பியவர் என்ற பெருமைக்குரியவர். இந்த முறையும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, ரவிச்சந்திரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.



அதேபோல், சென்னை மற்றும் புறநகரில் தற்போது எம்.எல்.ஏ.,க்களாக உள்ள தி.நகர் - ஜெ.கருணாநிதி, ராயபுரம் - ஐட்ரீம் மூர்த்தி, எழும்பூர் - பரந்தாமன், வில்லிவாக்கம் - வெற்றி அழகன், திருவொற்றியூர் - கே.பி.பி.சங்கர், அம்பத்துார் - ஜோசப் சாமுவேல், பல்லாவரம் - கருணாநிதி, தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.


வெற்றி வாய்ப்புள்ள திருவொற்றியூர் தொகுதியை மா.கம்யூ., கட்சிக்கும், பல்லாவரம் தொகுதியை தே.மு.தி.க.,வுக்கும் தி.மு.க., தாரை வார்த்துவிட்டதாக, உடன் பிறப்புகள் புலம்பி வருகின்றன. வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் கடும் அதிருப்தியில், தங்கள் மொபைல் போன்களை 'சுவிட்ச் ஆப்' செய்துவிட்டனர். பலரும் தங்கள் மாவட்ட பொறுப்பாளர்கள், மாநில அளவில் உள்ள நிர்வாகிகளின் வீடுகளுக்கு படையெடுத்து, தங்கள் அதிருப்தியையும், கோபத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

டி.ஆர்.பாலு வீடு முற்றுகை



இந்நிலையில், எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள், மேற்கு தாம்பரம், இரும்புலியூர் டி.டி.கே.நகரில் உள்ள, கட்சி பொருளாளர் டி.ஆர்.பாலு வீட்டை நேற்று இரவு, 200க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். தாம்பரம் வேட்பாளரையும், மாவட்ட செயலரையும் மாற்ற வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர். 'இது கட்சி தலைமை எடுத்த முடிவு; பிரச்னை ஏதும் செய்ய வேண்டாம்' என, டி.ஆர்.பாலு, அவர்களை சமாதானம் செய்தார்.

எந்த அடிப்படையில் வேட்பாளர் தேர்வு நடந்தது என, கேள்வி எழுப்பினர். கட்சியில் உழைப்புக்கு மரியாதை இல்லை என, பலரும் வெளிப்படையாகவே புலம்பத் துவங்கிவிட்டனர். வேட்பாளர் பட்டியலில் தேவையான மாற்றத்தை தலைமை செய்யும் என்றும் சிலர் எதிர்பார்ப்பில் உள்ளனர். தொகுதியில் நன்றாக வேலை செய்துள்ளேன். நிச்சயம் நமக்கு சீட் கிடைக்கும்' என்ற நம்பிக்கையில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்ட தி.நகர் எம்.எல்.ஏ.,வான ஜெ.கருணாநிதியும் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

ராஜினாமா



இதன் வெளிப்பாடாக, தி.மு.க., பகுதி செயலர் பதவியை அவர் நேற்று ராஜினாமா செய்தார். இது தொடர்பாக, கட்சி தலைமைக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்: தி.நகர் கிழக்கு பகுதி செயலராக பல ஆண்டுகாலம் கடுமையாக உழைத்துள்ளேன். அந்த உழைப்பிற்கும், நேர்மைக்கும், கட்சி மீதிருந்த பற்றுக்கும் தற்போது மதிப்பில்லை. எனவே, பகுதி செயலர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனக்கு ஒத்துழைப்பு அளித்த கட்சி தலைவருக்கும், பிற நிர்வாகிகளுக்கும் என் நன்றி.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.



இத்தனைக்கும், தி.நகர் தொகுதியில், அவரது அண்ணன் ஜெ.அன்பழகனின் மகன் ராஜாவுக்குதான் வாய்ப்பு தரப்பட்டள்ளது. எம்.எல் .ஏ., பதவியில் உள்ள ஒருவர் வெளிப்படையாக தன் அதிருப்தியை வெளிப்படுத்தி, பதவியை ராஜினாமா செய்திருப்பது, தி.மு.க., வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்.எம்.ஏ.,வாக உள்ளவர் கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளது, தி.மு.க., வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கவுன்சிலர்கள் 3 பேருக்கு வாய்ப்பு



சென்னை மாநகராட்சியின், 110வது வார்டு கவுன்சிலரும், பணிகள் நிலைக்குழு தலைவருமான சிற்றரசுக்கு, அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதேபோல், 141வது வார்டு கவுன்சிலரும், நியமன குழு உறுப்பினருமான ராஜா அன்பழகனுக்கு, தி.நகர் தொகுதியிலும்; 87வது வார்டு கவுன்சிலரும், பொது சுகாதார நிலைக்குழு உறுப்பினருமான பூர்ணிமாவுக்கு, அம்பத்துார் தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெண் டாக்டருக்கு வாய்ப்பு



தாம்பரம் தொகுதியில், புதுமுக வேட்பாளராக பெண் மருத்துவரான கிருத்திகா தேவி அறிவிக்கப்பட்டு உள்ளார். எம்.பி.பி.எஸ்., - டி.ஜி.ஓ., மருத்துவரான இவர், மேற்கு தாம்பரத்தில், 'பாபுஸ் மகப்பேறு மருத்துவமனை' நடத்தி வருகிறார். தி.மு.க.,வில் இணைந்து பணியாற்றி வந்த இவர், மாவட்ட மருத்துவ அணி பிரிவில் பதவி வகித்தார். தற்போது, தி.மு.க., மருத்துவர் அணி மாநில துணை செயலராக உள்ளார். இதன்மூலம், தாம்பரத்தில் முதல் முறையாக பெண் மருத்துவர் ஒருவர், தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement