37ஆண்டுகளுக்குப் பின் உசிலம்பட்டியில் காங்., போட்டி
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 37 ஆண்டுகளுக்குப்பின் இந்த தொகுதியில் காங்., களம் காண வாய்ப்பு கிடைத்துள்ளது.
உசிலம்பட்டி தொகுதி பா.பி., தொகுதியாக தமிழ்நாட்டிற்கு அறிமுகமான தொகுதி. பெரும்பாலும் பா.பி., கட்சியினரே வெற்றி பெற்றுள்ளனர். 1957 முதல் 1977 வரையிலான தேர்தல்களில் காங்., கட்சி போட்டியிட்டாலும் பா.பி., வேட்பாளரான பி.கே.மூக்கையாத்தேவரே தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார். 1989ல் நடந்த தேர்தலின் போது காங்., வேட்பாளராக நரியம்பட்டி பாண்டியன் போட்டியிட்டு 2ம் இடத்தை பெற்றார். அந்த தேர்தலில் பா.பி., வல்லரசு, தி.மு.க., கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அடுத்தடுத்து வந்த தோதல்களில் உசிலம்பட்டி தொகுதியில் காங்., போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்., கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டியில் தி.மு.க., தனியாக நின்று இதுவரை வெற்றி பெறவில்லை. பா.பி., அ.தி.மு.க., வினரே வெற்றி பெற்றுள்ளனர். இந்த முறையாவது உசிலம்பட்டி தொகுதியை தி.மு.க., கைப்பற்றி விட வேண்டும் என 3 ஒன்றியங்களாக இருந்த பகுதியை 8 ஒன்றியங்களாகப் பிரித்து பணிகள் மேற்கொண்டனர். அமைச்சர் மூர்த்தி, தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் கூடுதல் கவனம் செலுத்தினர்.
ஏற்கனவே இரண்டு முறை தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த எஸ்.ஓ. ராமசாமி மகன் தங்கப்பாண்டியன் தற்போது நகர் செயலாளராக உள்ளார். அதேபோல் வெற்றி வாய்ப்பை இழந்த கனிமொழியின் ஆதரவாளர் இளமகிழன், வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி உள்ளிட்ட ஒன்றியச் செயலாளர்கள் இணைந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அடுத்தடுத்து வழங்கி பணியாற்றி வந்தனர். இதன்பயனாக தேனி லோக்சபா தோதலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்ச்செல்வனுக்கு 70 ஆயிரம் ஓட்டுகள் உசிலம்பட்டி தொகுதியில் மட்டும் கூடுதலாக கிடைத்தது. அதனால் இந்த முறை எப்படியும் 'சீட்' கிடைத்துவிடும் என கட்சியினர் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த முறை அ.தி.மு.க., வில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அய்யப்பன், பன்னீர்செல்வம் அணிக்கு மாறினார். அவருடன் சேர்ந்து தி.மு.க., வில் இணைந்தார். உசிலம்பட்டி தொகுதி அய்யப்பனுக்கு ஒதுக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. கட்சியினர் தலைமையிடத்தில் இந்த முறை தி.மு.க., கட்சியினருக்குத்தான் ஒதுக்க வேண்டும் என வலுவாக மோதினர். தெருக்கடிக்கு ஆளான தி.மு.க., தலைமை கூட்டணி கட்சியான காங்., கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதியை ஒதுக்கிவிட்டு ஒதுங்கிக்கொண்டது.
மேலும்
-
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
-
விசைபடகு மீனவர்கள் அடாவடியால் நாட்டு படகு மீனவர்கள் பாதிப்பு
-
ஓட்டுச்சாவடி மையங்களில் தேர்தல் அலுவலர் ஆய்வு
-
செங்கல்பட்டு இனிதாக பகுதி
-
திருவள்ளூரில் வேட்புமனு பெறப்படும் இடங்கள்
-
விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட்; மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம்: திமுக தேர்தல் வாக்குறுதி