சுயேச்சையை கட்சி வேட்பாளராக்கிய சசிகலா

மூணாறு: இடுக்கி மாவட்டம் தேவிகுளம்(தனி) தொகுதியில் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்தவரை ஏழு நாட்களுக்கு பின் கட்சி வேட்பாளராக அ.பு.ம.மு.க. பொது செயலாளர் சசிகலா அறிவித்தார்.

கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்.9ல் தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 23ல் நிறைவடைந்தது. மார்ச் 26 வரை மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.

இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம் (தனி) தொகுதியில் ஆறு வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இத்தொகுதியில் மூணாறு அருகே தலையார் எஸ்டேட் கடுகுமுடி டிவிஷன் செல்லதுரை 71, சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் மார்ச் 23ல் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை 7 நாட்களுக்கு பின் அ.பு.ம.மு.க., சார்பில் போட்டியிவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா நேற்று முன்தினம் அறிவித்தார். அதற்கான கடிதமும் தரப்பட்டுள்ளது.

கேரளாவில் அ.தி.மு.க.,வை வளர்க்க தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரும்பினார். அதற்கு ஏற்ப பணிகளை செய்து 2016ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் இடுக்கி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சில வார்டுகளை அ.தி.மு.க., கைப்பற்றியது. அவரது மறைவுக்கு பிறகு கேரளா மீது அ.தி.மு.க.,வினர் கவனம் செலுத்தவில்லை. தற்போது ஜெயலலிதாவின் பாணியை கடைபிடித்துள்ள சசிகலா மிகவும் தாமதமாக சுயேட்சை வேட்பாளரை கட்சி வேட்பாளராக அறிவித்ததுள்ளார்.

Advertisement