மனைவி - மகள் கழுத்தறுத்து கொலை :நடத்தையில் சந்தேகத்தால் கணவர் வெறி

திரு.வி.க.: நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், மனைவி மற்றும் மகளை கழுத்தறுத்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பூர், வெற்றி நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன், 47. அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிவரஞ்சனி, 43; மகள் ஜெயஹரிணி, 9.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, மனநலம் பாதிக்கப்பட்ட சீனிவாசன், மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அடிக்கடி, பிரச்னை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவரது மனைவி சிவரஞ்சனி, மகள் ஜெயஹரிணி இருவரும், நேற்று அதிகாலை 3:00 மணியளவில் வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டிற்கு வந்த சீனிவாசன், இருவரின் வாயையும் பொத்தி, வீட்டில் சமைக்க பயன்படும் கத்தியால் கழுத்தை அறுத்து, கொடூரமாக கொலை செய்து தப்பினார்.

ரத்த வெள்ளத்தில் தாய் - மகள் சடலமாக கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர், திரு.வி.க., நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

அப்போது, அதே பகுதியில், எதுவும் நடக்காதது போல் சுற்றித்திரிந்த சீனிவாசனை, திரு.வி.க., நகர் போலீசார் நேற்று மதியம் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement