பறக்கும் படை சோதனையால் பாதியாக குறைந்தது பத்திரப்பதிவு
பெ.நா.பாளையம்: சட்டசபை தேர்தல் அறிவிப்பு எதிரொலியால் பறக்கும் படையின் கெடுபிடி தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் பத்திரப்பதிவு செய்யும் நபர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்., 23ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது. தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், வாகன சோதனைகளையும் நடத்தி வருகிறது.
பறக்கும் படையினர் வாகன சோதனைகளில், 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தனித்தனி குழுக்கள் உருவாக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் சோதனைகள் நடத்தப்படுகின்றன. வாகனங்களில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்படும் நபர்கள் உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், பறக்கும் படையினரால், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்கும் தொகை பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கருவூலத்தில் செலுத்தப்படுகிறது.
பணத்தை கொடுத்தவர்கள் உரிய ஆவணங்களை ஒப்படைத்து, பணத்தை திரும்ப பெறலாம். ஆனால் இதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் பெரும்பாலானோர், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்க பணத்தை எடுத்துச் செல்வதில்லை.
இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளதாக சிறு வியாபாரிகள் முதல் பெரும் தொழில்துறையினர் வரை புகார் தெரிவிக்கின்றனர்.
இதே போல பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் கடந்த, 10 நாட்களாக பத்திரப்பதிவு வெகுவாக குறைந்து விட்டதாக பத்திர எழுத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பத்திர எழுத்தர்கள் சிலர் கூறுகையில்,'பெரியநாயக்கன்பாளையம் பத்திர பதிவு அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு, 120 முதல், 130 வரை பல்வேறு பத்திர பதிவுகள் நடந்தன. தற்போது அது பாதியாக குறைந்துவிட்டது. கிரையம் உள்ளிட்ட பல்வேறு பதிவுகளில் பெரும்பாலும் ரொக்க தொகை பரிமாற்றம் நடக்கும். அதுவும் மார்க்கெட் மதிப்புகளுக்கான கிரையம் தான் நடக்கும். அப்போது வழிகாட்டி மதிப்பிற்கும், மார்க்கெட் மதிப்பிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். பறக்கும் படையினரிடம் ரொக்கத் தொகை சிக்கினால் அதை மீட்டு கொண்டு வருவது சிரமம். இதனால் பலர் பத்திர பதிவுகளை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு நிலைமை சீராகும் என, எதிர்பார்க்கிறோம்' என்றனர்.
இதே போல சூலூர், கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் பத்திரப்பதிவு கணிசமாக குறைந்துள்ளது.
மேலும்
-
வெளிநாட்டு 'டூர்' ஆசை காட்டிய முஸ்லிம் லீக் நிர்வாகி மீது வழக்கு
-
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் மீன் சாப்பிட முடியாது: முதல்வர் மம்தா விமர்சனம்
-
தானே மாநகராட்சியில் ரூ.4,500 கோடி மோசடி: கவுன்சிலர்கள் கொந்தளிப்பு
-
38,000 டன் எரிபொருள் வழங்கிய இந்தியாவுக்கு நன்றி: இலங்கை
-
மூன்றாவது முறையாக பா.ஜ., ஆட்சி தேசிய தலைவர் நிதின் நபின் நம்பிக்கை
-
3வது துணை வாக்காளர் பட்டியல் மேற்கு வங்கத்தில் வௌியீடு