அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வைபவம்

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், பங்குனி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.

காரமடை அரங்கநாதர் கோவிலில், நேற்று பங்குனி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவத்தை முன்னிட்டு, அதிகாலையில் கோவில் நடை திறந்து, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை ஆகியவை நடந்தன. பின்பு விஷ்வக்ஷேனர் பூஜை, புண்ணியாவசனம், கலச ஆவாஹனம் ஆகியவை நடந்தன. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் உற்சவ மூர்த்திகளுக்கு, பால், தயிர், நெய், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் திரவியங்களால் ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.

அரங்கநாதர் பெருமாள், வெள்ளி சப்பரத்தில், வெண்பட்டு குடை சூழ மேள தாளங்கள் முழங்க, கோவிலில் வலம் வந்து, ஆஸ்தானம் அடைந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, எழுந்தருளினார். தொடர்ந்து உச்சிக்கால பூஜை, சாற்றுமுறை சேவித்து, மகா தீபாராதனை முடிந்து தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள் வேதவியாச ஸ்ரீதர் பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி, அர்ச்சகர்கள் திருவேங்கடம், சுரேஷ் நாராயணன், சவுந்தர்ராஜன், மிராசுதாரர்கள், செயல் அலுவலர், பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

Advertisement