ஆலந்துாரில் 4வது முறை போட்டியிடும் அன்பரசன்

ஆலந்துார்: தி.மு.க., சார்பில் ஆலந்துார் தொகுதியில் நான்காவது முறையாக, அமைச்சர் அன்பரசன் போட்டியிடுகிறார்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலர் அன்பரசன், 66; கடந்த 24 ஆண்டுகளாக தி.மு.க., மாவட்ட செயலராக உள்ளார். நெசவு தொழில் பாரம்பரியம் உடைய இவர், பி.யூ.சி., படித்தவர்.

கடந்த 1996 முதல் 2006ம் ஆண்டு வரை குன்றத்துார் பேரூராட்சி தலைவராக இருந்தார். கடந்த, 2006ல் ஆலந்துார் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்; தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார்.

கடந்த 2016, 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார்; குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சராக இருந்து வருகிறார்.

இம்முறையும், ஆலந்துார் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, நான்காவது முறையாக ஆலந்துார் தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று, தொகுதியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து, தன் வெற்றிக்காக பிரசாரம் செய்ய வரும்படி ஆதரவு கோரினார்.

Advertisement