மின்விளக்கின்றி மணிமங்கலம் சாலை விபத்து :அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து மணிமங்கலம் செல்லும் சாலையில், மின் விளக்கு இல்லாததால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் - மணிமங்கலம் சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சுற்றுவட்டாரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சாலையை பயன்படுத்தி, ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார் அருகே, பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்கா இந்த சாலையை ஒட்டி இருப்பதால், தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன.

வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், நாவலுார், கொளத்துார், மலைப்பட்டு, சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின் விளக்கு வசதி இல்லை. இதனால், இந்த சாலை இருளில் மூழ்கி உள்ளது.

போதிய வெளிச்சம் இல்லாததால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.

எனவே, நெடுஞ்சாலைத் துறையினர், இந்த சாலையில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement