ஐ.டி.,விங் நிர்வாகிகளை களமிறக்கி  த.வெ.க., ஓட்டுகளை கணிக்க ஐடியா

விருத்தாசலம்: த.வெ.க., வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் ஆதரவு ஓட்டுகளை கணிக்கும் வகையில் ஐ.டி.,விங் நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.

நடப்பு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிவித்து, வழக்கம்போல அதிரடி காட்டினார். அதுபோல், புதுவரவான த.வெ.க., வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் விஜய் நேற்று அறிவித்தார்.

மாவட்டத்தில் உள்ள, 7 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அக்கட்சியால் ஏற்படும் பாதிப்புகளை கடந்த சில மாதங்களாகவே தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதால், அக்கட்சிக்கு செல்லும் ஆதரவு ஓட்டுகளை கண்காணிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக, சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடும் ஐ.டி., விங் நிர்வாகிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

த.வெ.க.,வுக்கு சமூக வலைதளங்கள் மட்டுமல்லாது பொது வெளியில் ஆதரவு தருவோர், திராவிட கட்சிகளுக்கு எதிரான மனநிலை கொண்ட வாக்காளர்கள் மற்றும் கடந்த தேர்தலில் நாம் தமிழருக்கு ஆதரவு தெரிவித்த நபர்கள் என சேகரிக்கப்படுகிறது.

கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியால் ஏற்பட்ட பாதிப்பை விட, இந்த தேர்தலில் த.வெ.க., அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

இதனால் பூத் வாரியாக சிதறும் ஓட்டுகளை கணக்கெடுத்து, பாதகத்தை சாதகமாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

Advertisement