‛மா' வில் சாம்பல் நோயை கட்டுப்படுத்த ஆலோனை

தேனி:'மா' சாகுபடியில் சாம்பல் நோய் எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என தோட்டக்கலை துணை இயக்குநர் நிர்மலா ஆலோசனை வழங்கி உள்ளார்.

அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 9200 எக்டர் வரை மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தற்போது மா பயிரில் பூக்கள் பூத்து பிஞ்சுகள் காயாக மாறும் தருவாயில் உள்ளன. இப்போது பூக்களை தாக்கும் தத்துபூச்சி, சாம்பல் நோய்களை கட்டுப்படுத்துவது அவசியமாகும். தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்த தோட்டத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

சாம்பல் நோய் பாதித்த பகுதிகளில் பூஞ்சானம் காணப்படுகிறது. இதனால் பழங்கள் பட்டாணி அளவில் உதிர்ந்து விடுகின்றன. இதனை கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 2 கிராம், கார்பென்டசியம் ஒரு கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இலைப்பேன் இருந்தால் டோல் பென்பைராட் 20 மி.லி., மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பிஞ்சுகள் உதிர்வதை தடுக்க பொட்டாசியம் நைட்ரேட் 10 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பூக்கள் காயாக மாறுவதை அதிகரிக்க என்.ஏ.ஏ., 2 மி.லி., மருந்தை ஒருலிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் என்றார்.

Advertisement