ரவுடியை கொலை செய்ய திட்டம் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 7 பேர் கைது 

புதுச்சேரி: சோரப்பட்டில் ரவுடியை கொலை செய்ய ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 ரவுடிகள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

சோரப்பட்டு சுடுகாட்டு பகுதியில், சிலர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் வகையில், ஆயுதங்களுடன் பதுங்கிருப்பதாக திருக்கனுார் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசாரை கண்ட அந்த கும்பல் தப்பி ஓட முயன்றனர்.

அவர்கள் 7 பேரையும் போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். சோரப்பட்டு, தென்னஞ்சாலை வீதியை சேர்ந்த ரவுடியான மோகன் மகன் அருளரசன், 25; சன்னியாசிகுப்பம், அங்கன்வாடி தெருவை சேர்ந்த ரவுடியான இளங்கோவன் மகன் இளங்கதிர், 25; வைத்தியநாதன் மகன் கவிபிரம்மன்,26; ரங்கசாமி மகன் ராகுல், 19; சகடப்பட்டு, மாரியம்மன் கோவில் தெரு தேசிங்கு மகன் சேகர், 24; மற்றும் 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது.

சோரப்பட்டை சேர்ந்த ரவுடியான கார்மேகத்துடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அருளரசன் தனது கூட்டாளிகளுடன், அவரை கொலை செய்யும் திட்டத்துடன் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து 7 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கத்திகள், 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். அவர்களை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி 5 பேரை காலாப்பட்டு மத்திய சிறையிலும், 2 பேரை சிறுவர் சிர்சிருத்தப் பள்ளியிலும் அடைத்தனர். மேலும், தப்பி ஓடிய சகடப்பட்டை சேர்ந்த சிவராமகிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட அருளரசன், இளங்கதிர் ஆகியோர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement