கிரைம் கார்னர்: பெயின்டரை கல்லால் தாக்கியவர் கைது
வேளச்சேரி: ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக், 36. இவரும், வேளச்சேரி, நேரு நகரைச் சேர்ந்த கார்த்திக், 45, என்பவரும் நண்பர்கள். பெயின்டர்களான இருவரும், நேற்று முன்தினம் இரவு, வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள காலி இடத்தில் அமர்ந்து மது அருந்தினர்.
அப்போது, மது வாங்குவது தொடர்பாக, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வேளச்சேரி கார்த்திக், ஆதம்பாக்கம் கார்த்திக்கை செங்கல்லால் சரமாரியாக தாக்கினார். விசாரித்த வேளச்சேரி போலீசார், வேளச்சேரி கார்த்திக்கை நேற்று கைது செய்தனர்.
***
ஜாமினில் வந்தவரை நோட்டமிட்டோர் சரண்
திருநின்றவூர்: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் அருளுக்கு, நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
அவரை, சிலர் நோட்டமிடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அருளை பின்தொடர்ந்து நோட்டமிட்ட ஐந்து பேரை, திருநின்றவூர் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின்படி, திருவள்ளூர் மாவட்டம், கீழானுாரைச் சேர்ந்த பிரேம் சேகர், 40, கர்ணாமூர்த்தி, 37, ஆகியோரை தேடி வந்த நிலையில், நேற்று திருநின்றவூர் காவல் நிலையத்தில் அவர்கள் சரணடைந்தனர்.
***
'மெட்ரோ' ரயில் நிலையத்தில் திருட்டு
சைதாப்பேட்டை: நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள 'லிப்ட், எஸ்கலேட்டர்' உள்ளிட்டவற்றிற்கான உதிரி பாகங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. அதில் இருந்த 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை, மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். ரயில் நிலைய பாதுகாப்பு அதிகாரி ஜெகன் அளித்த புகாரின்படி, சைதாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
***
வங்கியில் திருட முயன்றவர் சிக்கினார்
அசோக் நகர்: மேற்கு மாம்பலத்தில், பாங்க் ஆப் இந்தியா என்ற தனியார் வங்கியின் ஷட்டரில் இருந்த மூன்று பூட்டுகள், கடந்த 5ம் தேதி உடைக்கப்பட்டிருந்தன.
வங்கிக்குள் நுழைந்த நபர், பணம் மற்றும் நகைகளை திருட முயன்றும் முடியாமல், உள்ளிருந்த ஆவணங்களை சிதறடித்து சென்றது தெரிந்தது.
விசாரித்த அசோக் நகர் போலீசார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மோசஸ் சவுந்தர், 26, என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில், மேற்கு மாம்பலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த மோசஸ் சவுந்தர், தொடர்ந்து நோட்டமிட்ட பின்னரே, வங்கியில் கொள்ளையடிக்க முயன்றது தெரிந்தது.